பொலிஸார் கொலை – பின்னனியில் கருணாவா?

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்பதாக, நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.


சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவமானது பாரதூரமான ஒன்றாகும். அண்மையில் கருணா அம்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில், ‘சில ஐக்கிய தேசியக் கட்சியினர் கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். நான் மட்டக்களப்பு கருணா அம்மான் . 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய கருணா அம்மான் என்றால் யார் என மற்றவர்களிடம் கேளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பின்னரே நேற்றிரவு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் கருணா அம்மானுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ வளர்த்து வரும் கருணா அம்மான் போன்றவர்களைப் பாவித்து இந்த கள்ள அரசாங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தினை கெடுக்க முயற்சிக்கின்றதாக என எண்ணத் தோன்றுகின்றது.

இதன் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் இருக்கின்றாரா என விசாரணை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.