ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்-ஜே.வி.பி.!

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீடீர் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரான ஒன்று என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.


பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்  இதனைக் கூறினார்.

இந்த தீர்மானம் குறித்து இன்று தமது அரசியல் கட்சியின் உயர் பீடம் கூடி முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்துள்ள இந்த நடவடிக்கை முழுமையாக அரசியல் யாப்பை மீறும் செயலாகும். முன்னர் பிரதமர் ஒருவரை நியமித்தமையும் ஜனாதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கையாகும்.

நாட்டின் முதற்பிரஜை நாட்டின் அடிப்படையாகவுள்ள சட்டத்தை மீறுகின்றார். இலங்கை வரலாற்றில் இதுபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யுமாறு  மக்கள் விடுதலை முன்னணி அன்று முதல் கூறி வருவதற்கான காரணம் இதுவாகும்.

பாராளுமன்றத்தைக் கலைத்தமை ஒரு சட்டவிரோதமான நடவடிக்கை. இதனை எந்தவகையிலும் சட்ட ரீதியானது என ஏற்க முடியாது. இதற்கு எதிராக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று முதல் தீர்மானிக்கவுள்ளோம்.

நாம் மீண்டும் சொல்கின்றோம். ஜனாதிபதி செய்த நடவடிக்கை முற்றிலும் தவறானது. இந்த நாட்டின் ஜனநாயகத்தை மாத்திரமல்ல, அரசியல் யாப்பையும் மீறும் செயலாகவே இது உள்ளது. இந்த சர்வாதிகார நடவடிக்கையை மிக வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.