சென்னையில் 'மாஸ்' காட்ட தினகரன் முடிவு!

ஜெ.வின் நினைவு நாளையொட்டி தொண்டர்களுக்கு டிடிவி அழைப்பு விடுத்துள்ளார்.அம்மாவின் 2-ம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5-ம் தேதி அஞ்சலி செலுத்த பெரும் திரளாக கூடுவோம் என்று டிடிவி தினகரன் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த அதிமுக தரப்பில் ஏற்கனவே இது சம்பந்தமான அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது.

இந்நிலையில், அமமுக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது தொண்டர்களுக்கு விடுத்துள்ள அந்த அறிக்கையில் அவர் சொல்லி இருப்பதாவது:"புரட்சித்தலைவர் அடியொற்றி அரசியல் உலகில் தனது பயணத்தை அமைத்து, சோதனை சுடு நெருப்புகள் தன்னை தீண்டியபோதும், தளராத மன வலிமைகொண்டு, எதிர்ப்புகள் அத்தனையையும் வென்று காட்டிய வீர சரித்திரம் நமது அம்மா.


அதிமுகவை மீட்கும்
ஏழைகளுக்கு ஏற்றம் தந்து, தமிழகத்தின் காவல் அரணாக திகழ்ந்திட்ட நம் அன்புத்தாயின் மறைவுக்குப் பின்னால் தமிழகத்தின் கவசமாக திகழ்ந்த இயக்கம் இன்று பூண்டிருக்கும் அவலக்கோலத்தை மாற்றிடவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அவதரித்து, அ.தி.மு.கவை மீட்கும் இயக்கமாக எழுந்துள்ளது.


சத்திய போராட்டம்
இந்த சத்தியப் போராட்டத்திற்கு அம்மாவின் உண்மைத் தொண்டர்களான நீங்கள் 90 சதவீதத்திற்கு மேலானோரும், தமிழக மக்களும், தங்களது பேராதரவை வழங்கிவருவதை ஒவ்வொரு களத்திலும் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.


மந்திர சொல்
நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்றாலும், அம்மா என்கிற மந்திர சொல், என்றும் நம்மை இயக்கிடும் பெரும் சக்தியாக நம் ஆயுள் முழுவதும் திகழ்ந்திடும்.


உறுதிமொழி ஏற்போம்
இத்தகைய பெருமைக்குரிய அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலிருந்து நம் கழகத்தின் சார்பாக நடைபெற உள்ள மவுன ஊர்வலத்தில், நாம் அனைவரும் பெரும் திரளாய் கூடி வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் நம் அம்மாவின் நினைவிடத்தில் சங்கமித்து இதயஅஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றிடுவோம்" என்று கூறியுள்ளார். 
Powered by Blogger.