இதயமில்லாத மனிதநேயம்..!இன்று 
சர்வதேச மனிதவுரிமைகள்
நாளென
நாட்காட்டியின் பக்கங்களில் 
ஒட்டிக்கிடக்கிறதே!
ஒரு முறை
ஒன்பது ஆண்டுகளை
பின் நகர்த்திப்
பார்க்கின்றேன்
நாடி நாளங்கள்
புடைத்து
இருதயம் உப்பி
வெடிப்பதுபோல்
உணர்வுகளின்
அழுத்தம்
ஈரவிழிகளின்
கரையுடைத்து
காதுகளை நனைக்கிறதே!
மிருகங்கள் மீது
அன்புசெலுத்தி
மிருகநேயம் பேசும்
சர்வதேசத்தின் மனிதநேயவாசல் மட்டும் 
அன்று
இறுக அடைத்துக்கிடந்ததே!
அறம்பேசும் மகான்களின்
இதயவறைகள்
அன்பு புகா வண்ணம் 
சுய அரசியலெனும்
சாவி போட்டுப் பூட்டிக்கிடந்ததே!
பிணம் பிணமாக 
புத்த மதத்தின் 
போதனையில்
நிலம் புதைந்தும் எரிந்தும் காணாமல் போயும்
கொத்துக் கொத்தாக
தமிழரின் தலைகள் 
தறிக்கப்பட்டு
சிங்களம்
வெறிகொண்டாடிய
வேளையில்
மனிதநேயக்கோவைகள்
எல்லாம்
பனிக்கட்டிகளுக்குள்
இறுகித்தானே
இருந்தது!
மன்னித்து விடுங்கள் 
மனிதவுரிமை நாளை
மறந்து
ஒரு தசாப்தத்தினை
எட்டப்போகின்றது
எங்கள் 
இதயம்!
-தூயவன்-
Powered by Blogger.