நாடு கடத்தப்படும் விஜய் மல்லையா: தீர்ப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டுமென்று கோரித்
தொடரப்பட்ட வழக்கில், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடனாகப் பெற்றுவிட்டு, சில ஆண்டுகளாக பிரிட்டன் நாட்டில் வாழ்ந்து வருகிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, மத்திய அரசு தரப்பில் மும்முரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு, இன்று (டிசம்பர் 10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு, நேற்றே சிபிஐ அதிகாரிகளும், மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகளும் லண்டன் சென்றுவிட்டனர்.
இந்த வழக்கில், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவானது பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து, 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அவர் மேல்முறையீடு செய்யாவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றதாகக் கருதப்பட்டு 28 நாட்களுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி லண்டன் நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த வழக்கு விசாரணையில், விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒப்புதல் தெரிவித்து உத்தரவு பிறப்பித்தது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளது சிபிஐ தரப்பு. விரைவில் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரவுள்ளதாகவும், அவரது வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள்.
முன்னதாக, தீர்ப்பு இந்திய தரப்புக்குச் சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் வாங்கிய கடன் தொகையின் அசல் முழுவதையும் செலுத்திவிடுவதாகவும், இந்திய அரசு அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் விஜய் மல்லையா கோரிக்கை வைத்தார். எந்த நேரத்திலும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கடத்துவதற்கான தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலையில், அவரை அடைப்பதற்காக மும்பை ஆர்தர் சாலையிலுள்ள சிறைச்சாலை தயார் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவுக்குச் சிறை தயார் செய்யப்பட்டுள்ள தகவலையும், சிறையின் படங்களையும் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்துவிட்டது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். பலத்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட இச்சிறையில் உடனடி மருத்துவ தேவைகளுக்கான வசதிகளும் உண்டு

No comments

Powered by Blogger.