பாடு நிலாவே பாகம் 11







“சாதும்மா, ஒரு விசயம் கேக்கலாமாடா?” 

“என்ன அம்மா, கேளுங்கோ”
“நீயும் எங்களோட அங்க வந்திடுறியாம்மா?”
“ அம்மா, என்ன கேக்கிறீங்கள், நான் எப்பிடி உங்கட வீட்ட?” 
“வேண்டாம், வேண்டாம்---எங்கட வீட்ட வேண்டாம், இஞ்ச மாதிரி ஏதாவது பராமரிப்பகத்தில இரனம்மா,”

“அம்மா?”
“சாதும்மா, நீ அங்க இருந்தா நான் நாங்கள் உன்னை அடிக்கடி வந்து பாக்கலாம், உனக்கு சிகிச்சையும் செய்யலாம், உனக்குத்தெரியும் தானே, பகலவன் அண்ணாவும் கண் வைத்தியர் தானே, யாருக்கோ செய்யிறான், நல்ல கண் வைத்தியர் எண்டு பெயர் எடுத்திருக்கிறான், உனக்கு செய்யாமல் விடுவானோ, யாருக்காக இல்லாட்டியும் எனக்காக வாம்மா, மகளா இல்லாட்டியும், நான் உன்னை அப்பிடித்தான் நேசிக்கிறன்” 
“அம்மா, நீங்கள் மட்டும் முடிவெடுத்தால் போதுமே, அப்பா?”

தன் சம்மதத்தை இப்படிச் சொன்னவளை அன்பாகத் தழுவிக்கொண்டவர், 
“என்னங்க, பேசாமல் நிக்கிறீங்க?” என்றார் கணவரிடம்.

"சாதுக்கண்ணா, உனக்கே தெரியும் நானும் அம்மாவும் ஏன் காருவும் பகலவனும் கூட உன்னில நிறைய அன்பு வைச்சிருக்கிறம்னு, அதைவிட, இங்க இருக்கிறதைவிட அங்க வைத்திய வசதிகள் கூட, இப்பிடி முடங்கி கிடக்காம கடகடவென்று வைத்தியத்தை முடிச்சிட்டு உன்னுடைய இலட்சியப்பயணத்தை தொடங்கணும், நிறைய இழப்புகளைச் சந்திச்சிட்டாய், எல்லாம் தாண்டி சாதிக்கணும், நீ சாதிக்கப்பிறந்தவ, நீ புரிஞ்சுகொண்டா சரிதான்மா, எதுக்குமே சளைக்காத சாதனாவா, இப்பிடி? என்னால சகிக்கவே முடியல்ல, சீக்கிரமா புறப்பட்டு நம்மளோட வாம்மா” என்றார். 
“சரி அப்பா, ஆனா, ஒண்டு மட்டும் சொல்லுறன்”
“என்னடாம்மா?” அவசரமாய் கேட்டார் காங்கேசனின் தாயார். 
“என்னுடைய வைத்திய செலவு எல்லாத்தையும் ஏதாவது தொண்டு நிறுவனம் ஏற்கிற மாதிரி ஏற்பாடு செய்து தரணும்” என்றாள்.

“அதுக்கென்னடா, நீ எங்களோட வந்திட்டா போதும் எல்லாத்தையும் நான் பாத்துக்கொள்ளுறன், நீ சரியெண்டா, காங்கேசன் மத்த எல்லாத்தையும் கவனிப்பான்” என்றார் காங்கேசனின் தந்தையார்.

“அப்பா, சிஸ்ரரிட்ட நீங்களே தெளிவா சொல்லுங்கோ, பிறகு நானும் கதைக்கிறன், அங்க ஹோம் அவாவே ஏற்பாடு செய்வா” என்றாள். 
“சரி சரி, நான் இப்பவே போய் கதைக்கிறன்” என்றபடி விரைந்தார்.

“ஆமாங்க, உடனே பாருங்க” என்ற காங்கேசனின் தாயார், தனது மொபைலில் எண்களைத்தட்டும் சத்தம் கேட்டு, “யாருக்கு அம்மா?” என்றாள் சாதனா. 
“காருவுக்குத்தானடா, உன்ர முடிவைக்கேட்டா அவன் ரொம்ப சந்தோசப்படுவான்” என்றார். 
சாதனாவுக்கு மனசுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது. காரணம் புரியவில்லை. 
பத்தே நிமிடத்தில் அவசரமாய் வந்துநின்றான் காங்கேசன், இசையாளனுடன்.

“என்ன சாது, அம்மா சொன்னது உண்மையா?”

"உண்மைதான், ஆனா நான் தங்கப்போறது, உங்கட வீட்ல இல்லடா, பராமரிப்பகத்தில“ இழுத்தாள்.

“என்னது? பராமரிப்பகத்திலயா?” அதிர்ந்து கேட்டவனை விழிகளால் அடக்கினார் அன்னை.

“அம்மா, இவன் இன்னும் நாங்கள் சின்ன வயது காங்கேசன்- சாதனா எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறான் பாருங்கோ” என்றாள் குறையாய்.

மௌனமாய் புன்னகைத்தான் காங்கேசன். 
மெல்லத்தட்டிய இசையாளன், பார்வையால் பாராட்டைப் பகிர்ந்தான்.

புன்னகையோடு கண்சிமிட்டிய காங்கேசனின் பார்வையில் வெற்றிப் பெருமிதம் இருந்தது, ‘எப்பிடி? யாரைவிட்டு வளைக்கணும்னு எனக்குத் தெரியும், அதான் உடனே அம்மா அப்பாவை வரவைச்சேன் எனக்கூறியது அந்தக்கண்சிமிட்டல்.

‘சிறகிழந்த இந்தச் சின்னப்புறாவை எப்படியும் பறக்கவைத்துவிடலாம்’ என்றது அவனது உள் மனம். இதயம் எம்பிக் குதித்தது சந்தோசக் களிப்பில் காங்கேசனுக்கு.

தொடரும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.