ஸ்ருதி: மீடூவால் வந்த சோதனை!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீ டூ இயக்கம் மூலம்
சமூகவலைதளங்களின் வாயிலாக பரவலாகப் பேசப்பட்டன. முக்கியமாக திரைத்துறையைச் சார்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தைரியமாக பொதுவெளியில் பேசினர். இதனால் உத்வேகம் கொண்டு பிற துறைச்சார்ந்தவர்களும் பாலியல் கொடுமைகள் குறித்து பேசத் தொடங்கினர். அக்டோபர் மாதம் இந்தியா முழுவதும் இந்த மீ டூ இயக்கம் பேசுபொருளானது. ஆனால் இதன் மூலம் பெண்களுக்கு நியாயம் கிடைத்ததா என்றால் மேலும் சில பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவே பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். இதில் தற்போது நடிகை ஸ்ருதி ஹரிகரனும் இணைந்துள்ளார்.
இந்தித் திரையுலகில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர்கள், இயக்குநர்களோடு இணைந்து பணியாற்ற மற்ற கலைஞர்கள் தயக்கம் காட்டினர். ஆனால் தென்னிந்தியத் திரையுலகில் அதுவும் நடக்கவில்லை. பிரபலங்கள் தங்களது, பணம், செல்வாக்கைக் கொண்டு பெண்களை அடக்குவது அவர்களுக்கான வாய்ப்புகளை இல்லாமல் ஆக்குவது ஆகியவற்றையே தங்களது ஆயுதமாகப் பயன்படுத்திவருகின்றனர். மீ டூ இயக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்று கூறப்பட்டாலும் இன்னும் அதே ஆயுதம் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் தாக்கப்படுகின்றனர்.
நிபுணன் படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டார் என அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் குற்றம் சாட்டினார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததோடு அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இயக்குநர் லீனா மணிமேகலை, நடிகை அமலா பால், பாடகி சின்மயி ஆகியோர் பாலியல் புகார்களைக் கூறினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதுவரை துறை ரீதியான நடவடிக்கையோ சட்ட ரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. ஆனால் குற்றம் சாட்டியவர்கள் மீது மறைமுகமாகத் தாக்குதல் நடைபெறுகின்றன.
ஸ்ருதி ஹரிகரன் தி நியூஸ் மினிட்டுக்கு அளித்த பேட்டியில், “ இது என்னைக் காயப்படுத்தினாலும் பெருமை கொள்ளவும் செய்கிறது. இது என்னை துன்பப்படுத்தினாலும் எதிர்காலத்தில் சில பெண்களாவது பயப்படாமல் துணிந்து பேசுவார்கள். இதை நடைமுறையில் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை வாரத்திற்கு மூன்று பட வாய்ப்புகளாவது எனக்கு வரும். நான் குறிப்பாக கன்னடத்தில் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பேன். வழக்கமாக நமது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தான் அடுத்த வாய்ப்புகள் வரும். செப்டம்பர் மாதம் எனது பெரிய படம் ஒன்று வெளியானது. ஆனால் அதன் பின் வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது” என்று கூறினார்.
“படவாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள். ஆனால் இயக்குநர்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக எனக்காக எழுதுகிறார்கள். இதன் மூலம் எனக்கு சில எதிரிகள் உருவாவார்கள் என்பது தெரியும். அதனால் இதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் ஸ்ருதிக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் நஷ்ட ஈடாக அவர் 5 கோடி கேட்டார் என்று வெளியாகிய தகவலை அவரது வழக்கறிஞர் ஜெய்னா கொத்தாரி மறுத்துள்ளார்.
“அர்ஜுன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ஆனால் 5 கோடி ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது உண்மையில்லை. அவர் பணம் எதையும் கேட்கவில்லை. அவர் பணம் கேட்டார் என்றால் நீதிமன்றத்திற்கும் பெரியளவில் கட்டணம் கட்ட வேண்டியதிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.