மழைக்கு வாய்ப்பில்லை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இந்திய பெருங்கடல், தென்மேற்கு
வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இதனால், இன்று முதல் 3 நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன் கூறுகையில், “நேற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மத்திய தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து ஆந்திர மற்றும் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும். அதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நாளை மாலைக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும்” என்று தெரிவித்தார். அதே சமயத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.