பனையோலை பொம்மைகள் பயில்வு - புளியானூர் குழந்தைகள்

மலையே மறையும் அதிகாலை
குளிர்பனியில், திருவண்ணாமலை வரை சென்று பனையோலையை எடுத்துவர, தீபக் அண்ணாவும் விநாயகம் அண்ணாவும் போய் வந்தனர். 10 மணிக்குள் புளியானூர் குழந்தைகள் 30 பேர் குக்கூ நிலத்தை வந்தடைய, வாணி அக்கா முன்னெடுத்து பயில்விக்க, பனையோலை ஈக்குகளை கிழித்து ஒவ்வொரு பொம்மையாக செய்யத் துவங்கினர். ஒவ்வொரு உருவங்களாக குழந்தைகளின் விரல்கள் மடித்துமடித்து மண் வைத்தன.

பிறகு, ஆவரங்குட்டை தொலைகிராமத்தில் இருந்து 10 குழந்தைகள் மிதிவண்டியில் வந்து சேரந்து கொண்டனர். காட்டு வழியாக வழிபோக்காக வந்த சிறு குழந்தைகள் என 50 குழந்தைகளோடு, தாயப்புளியமரத்தின் விரிநிழலின் கீழ் பயிற்சி நிகழ...நிமிடத்துக்கு நிமிடம் ஓலை வடிவம் மாறிக்கொண்டே வந்தது. அசையும் மனிதன், பறவை, தட்டான், கிளி, மோதிரம், காத்தாடி,.. என குட்டிகுட்டி பொம்மைகள் செய்ய கற்றுக்கொண்டனர். தங்களுக்கே உரியதான செல்லமொழியில் அப்பொம்மைகளுக்கு பெயரும் வைத்துக்கொண்டனர்.

இடையிடையே பாடல், கதை சொல்லல், பனை குறித்த சிறுகுறிப்புகள் என சோர்வின்றி வகுப்பு நடந்தது. மாலை அனைத்து குழந்தைகளும் குக்கூ நிலத்தின் வேலியோரம் பனை விதைகளை நட்டு, வருங்கால பனை வளர்ச்சிக்காக மண்கையோடு பிரார்த்தனையும் செய்தனர். நிகழ்வு முடிந்து அனைவரும் வீடு சென்ற பின், மறுநாள் இரவு குழந்தை சஷ்டிகா தான் செய்த பனையோலை கிளிக்கு வண்ணம் தீட்டி, கண் வரைந்து, சிறகுக்கு செதில் போல் சீவி வாணியக்காவிடம் கொடுத்த போது... நிகழ்வின் படைப்புமனம் பன்மடங்கு நிறைவுபூத்தது.

இம்மாத இறுதியில் (டிசம்பர் 29,30 தினங்களில்) பிறநகர குழந்தைகளுக்கான பயிற்றுவித்தல் முகாமும் நிகழவிருக்கிறது.

தொடர்புக்கு,
+91 8270222007

#cuckoolearningcircle, #குக்கூகாட்டுப்பள்ளி
#cuckooforestschool
#குக்கூகற்றல்பயில்வட்டம்

No comments

Powered by Blogger.