கஜா: கோடியக்கரையில் மடிந்து போன விலங்குகள்!

கஜா புயலால் கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்தில் முதற்கட்ட
கணக்கெடுப்பில் 373 பறவைகள், 18 மான்கள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், கோடியக்கரையில் உள்ள வன விலங்குகள் சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் புயலினால் வேரோடு சாய்ந்தன. மரங்கள் முழுவதும் சாய்ந்து இருந்ததால், வன விலங்குகள், பறவைகள் என்னவாயிற்று என்பது குறித்து தெரியாமல் இருந்தது. தற்போது, மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், உயிரிழந்த வன விலங்குகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
மாவட்ட வன உயிரின காப்பாளர் நாகசதிஷ் கிடிசாலா தலைமையில் வனத் துறை ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கஜா புயல் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயலால் 17 வெளி மான்களும், ஒரு புள்ளி மானும், 4 பன்றிகளும், 373 பறவைகளும் உயிரிழந்திருப்பது முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பு பணி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைந்த பின்னர், இறந்த பறவைகள்,விலங்குகள் குறித்த முழுமையான விவரம் தெரிய வரும் என தெரிவித்தார்.
முன்புபோல் கோடியக்கரை சரணாலயம் காட்சியளிக்க, மரங்கள், மூலிகை செடிகளை நட்டு பராமரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதி ஒதுக்கவில்லை
கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்றும், மாநில அரசு நம்பிக்கையோடு காத்திருக்கிறது என்றும் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும்,அவர், காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் நிலை உள்ளதால் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது எனதெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.