சர்கார்: ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ஒத்திவைப்பு!

சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள
காட்சிகள் அரசின் நலத் திட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதால், முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய கூடாதென புகார் தாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று திரைக்கு வந்த, சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கொச்சைப்படுத்தி காட்சிகள் இருந்தது என்றும் அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் முருகதாஸ் படம் இயக்கி உள்ளதாகவும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் முருகதாஸ் மீது புகார் கொடுக்கப்பட்டது,
இந்நிலையில், தன்னைக் காவல்துறை எந்நேரமும் கைது செய்யலாம் என்ற பயத்தில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
முருகதாஸ் முன் ஜாமீன் வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முருகதாஸ் மீது கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது,
காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன் தினம் (டிசம்பர் 10) வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டுமென முருகதாஸ் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிசம்பர் 12) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது,
புகார் தாரரான தேவராஜன், சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அரசின் நலத் திட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது என்றும், இளைஞர்கள் சர்கார் படத்தை ஒரு தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் அதனால் முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது என்றும் ஆட்சேபம் தெரிவித்தார்,
அரசு தரப்பில் இந்த வழக்கில் மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது,
தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (டிசம்பர் 14) ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை முருகதாஸ் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனக் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.