அனுமதி வழங்கவே இல்லை!

தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சி நடத்த மட்டுமே அனுமதி
தரப்பட்டது என்றும், பந்தல் போடவோ, தியான நிகழ்ச்சி நடத்தவோ அனுமதி வழங்கவில்லை என தொல்லியல் துறை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் 2 நாட்கள் நடைபெறவிருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவன், பாரம்பரியமிக்க தஞ்சை கோயிலில் தனியார் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்றும், தியான நிகழ்ச்சிக்கு அனுமதி தர என்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் தொல்லியல் துறை உதவியாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில்,இன்று(டிசம்பர் 12) மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.அப்போது, பஜனை நிகழ்ச்சி நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பந்தல் போடவோ, தியான நிகழ்ச்சி நடத்தவோ அனுமதி வழங்கவில்லை என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, கோயிலுக்குள் இருந்த பந்தல் அகற்றப்பட்டதாகவும், நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என தொல்லியல் துறையிடம் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். தஞ்சை பெரிய கோயில் தேவஸ்தான இணை ஆணையர், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர், வாழும் கலை அமைப்பிற்கு அனுமதி வழங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments

Powered by Blogger.