எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர் விஸ்வரூபம்!

எனக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்தப்
பிரச்சினையும் இல்லை. அவர் அடிக்கடி என்னிடம் ஆலோசித்தே செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளும் சில மீடியாக்களும்தான் எங்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதாக ஊதிப் பெரிதாக்குகின்றன” என்று கடந்த வாரம் ஆங்கில நாளேடான தி ஹிந்துவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஒ.பன்னீர்செல்வம்.
ஆனால் நேற்று (டிசம்பர் 11) மாலை அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதன் முறையாக தனக்கே உரிய மெல்லிய குரலில் எடப்பாடிக்கு எதிராகக் கடுமையாக வெடித்திருக்கிறார் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்.
அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 11ஆம் தேதி மாலை ஆறு மணிக்குத் தொடங்கி ஆறரை மணிக்கு முடிந்துவிட்டது.
மாலை 5.45 மணிக்கெல்லாம் அனைவரும் தலைமைக் கழகம் வந்துவிட்டனர். கூட்ட அரங்கத்தில் 6 மணிக்குத் தொடங்கியது ஆலோசனைக் கூட்டம்.
முதலில் அவைத் தலைவர் மதுசூதனன் எழுந்து இரு நிமிடங்கள் பேசினார். அடுத்து அமைப்புச் செயலாளர் வைத்திலிங்கம் இரு நிமிடங்கள் பேசினார். பின் கே.பி.முனுசாமி எழுந்தார்.
“நாம ரொம்ப சோதனையான காலகட்டத்துல இருக்கோம். மக்களை சந்திச்சு முழுமையா அவங்களோட நம்பிக்கையப் பெற வேண்டியது அவசியம்” என்று சிற்சில நிமிடங்களில் பேசி முடித்துவிட்டார் கேபி முனுசாமி.
மைக்கைக் கைப்பற்றிய பன்னீர்
கூட்டத்தில் இருந்து சில அமைச்சர்கள் பேசுவதற்கு மைக் கேட்க, மறுக்கப்பட்டது. மேற்கண்ட மூவரும் பேசிய பிறகு அடுத்து பேச பாக்கியிருப்பது எடப்பாடியும், ஓ.பன்னீரும்தான். தலைமைக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த கட்சிக் கூட்டங்களில் எடப்பாடியே நிறைவுரை ஆற்றிவந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர் பேசிய பின்னரே இணை ஒருங்கிணைப்பாளர் பேசுகிறார் என்று மின்னம்பலத்திலேயே சில முறை செய்திகள் வெளியிட்டிருக்கிறோம்.
ஆனால் நேற்று காட்சி மாறியது. கே.பி.முனுசாமிக்குப் பிறகு எடப்பாடி பக்கம் திரும்பிய ஓ.பன்னீர், ‘நீங்க பேசுங்க. நான் கடைசியா பேசுறேன்’ என்று சொல்லிவிட்டார் ஓ.பன்னீர். தடக்கென முகம் மாறிய எடப்பாடி அதைக் காட்டிக்கொள்ளாமல் தானே பேசினார். இதுவரை தலைமைக் கழகக் கூட்டங்களில் கடைசியாகப் பேசி, தானே கட்சியின் தலைவர் என்ற தோற்றத்தை உருவாக்கினார் எடப்பாடி. ஆனால் நேற்று ஓ.பன்னீர் தானே நிறைவாகப் பேசியதன் மூலம், மைக்கை மட்டுமல்ல அந்த அதிகாரத்தையும் கைப்பற்ற முனைந்திருக்கிறார்.
பூத் கமிட்டி, இடைத்தேர்தல்
ஓ.பன்னீருக்கு முன்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் பத்து நிமிடங்கள் பேசியிருப்பார். அவரது பேச்சு முழுதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் வர இருக்கும் இருபது தொகுதி இடைத்தேர்தல் பற்றியுமே முழுக்க முழுக்க பேசினார்.
“இருபது தொகுதி இடைத்தேர்தல்ல நாம ஜெயிச்சாதான் ஆட்சிய தக்க வைக்க முடியும். அதனால அத்தனை நிர்வாகிகளும் கடுமையா வேலை பாக்கணும். மெட்ராஸ்ல வாரத்துக்கு ஒரு நாள் இருந்தா மட்டும் போதும், எல்லாரும் அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்குப் போயிடுங்க. முழு ஈடுபாட்டோட இடைத்தேர்தல் வேலையப் பாருங்க”என்ற எடப்பாடி பழனிசாமி அடுத்து பூத் கமிட்டி பற்றி பேசினார்.
“பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் இன்னும் பல பேரு தலைமைக் கழகத்துல கொடுக்கல. டிசம்பர் 16 ஆம் தேதிக்குள்ள கொடுத்திடுங்க. நான் சேலம் மாவட்டத்துல 10 ஆயிரத்துக்கு மேல பூத் கமிட்டி மெம்பர்களை போட்டிருக்கேன். ஒவ்வொரு பூத் கமிட்டி மெம்பர் குடும்பத்துலயும் அஞ்சு ஓட்டுனு வச்சிக்கங்க. கணக்குப் போட்டுப் பாருங்க. எவ்வளவு ஓட்டு நமக்கு வரும்னு” என்று விளக்கியவர் இந்த இரு பிரச்சினைகளை மட்டுமே பேசி முடித்தார்.
ஒருவருக்கு ஒரு பதவி
அதன் பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவுரை ஆற்ற மைக்கை கைப்பற்றினார்.
“இன்னிக்கு சில விஷயங்களை நான் உடைச்சிப் பேச விரும்புறேன். கட்சியோட பதவிகள்லாம் ஒரு சிலர்கிட்டயே குவிஞ்சு கிடக்கு. எனக்கு அம்மா கொடுத்த பதவி பொருளாளர் பதவி. இப்போ ஒருங்கிணைப்பாளரா இருக்கேன். இதுல நானே ஒரு பதவியை மட்டும் வகிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுபோல ஒவ்வொருத்தரும் முன் வரணும்” என்று குறிப்பிட்டார் பன்னீர்.
இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை நிலையச் செயலாளர், மாவட்டச் செயலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று மூன்று கட்சிப் பதவிகள் இருக்கின்றன. இதில் தலைமை நிலையச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் பன்னீரின் பிளான்.
யாருக்கும் ஃபேஸ் வேல்யூ இல்லை
தொடர்ந்து பேசிய பன்னீர், “அம்மா இருந்த கட்சிக்கும் அம்மா இல்லாத கட்சிக்கும் வித்தியாசத்தை நாம உணர்ந்திருக்கோமான்னு தெரியல. அம்மா காலத்துல நாம பெரிய அளவுல தோத்திருக்கோம். ஆனா அதையும் தாண்டி பெரிய அளவுல அம்மாவே நமக்கு ஜெயிச்சுக் கொடுத்திருக்காங்க. அதுக்குக் காரணம் அம்மாவோட ஃபேஸ் வேல்யூ. ஆனா இப்ப நம்ம கட்சில யாருக்கும் அந்த ஃபேஸ் வேல்யூ இல்லைங்குறத நாம ஒத்துக்கணும்.
அம்மா இல்லாம நாம தேர்தலை சந்திக்கப் போறோம். அதுக்கு நாம என்ன பண்ணனும்னு யோசிக்கணும். நாம என்ன பண்ணியிருக்கோம்னு யோசிக்கணும்.
தர்ம யுத்தம் பண்ணவங்கள ஒதுக்குறீங்க
மாவட்டக் கழகச் செயலாளர்கள் பல நிர்வாகிகளுக்கு, கட்சியின் மூத்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கறதில்ல. கட்சியில, ஆட்சியில ஏதாவது உதவி கேட்டுப் போன, ‘தர்ம யுத்தம் பண்ணவங்கனு ஒதுக்குறாங்க. இதெல்லாமே எனக்குத் தெரியும். இன்னும் சில விஷயங்களை சொல்லணும். ஆனா இப்ப வேணாம். மொதல்ல கட்சிக்காரங்களுக்கு உதவி செஞ்சு அவங்களை அனுசரிச்சுப் போங்க. அப்பதான் மக்களை ஈசியா அணுக முடியும். தர்ம யுத்தம் பண்ணவங்களுக்கு எதுவும் செஞ்சு கொடுக்கக்கூடாதா என்ன?” என்று பொங்கிவிட்டார் ஓ.பி.எஸ்.
அணிகள் இணைந்த பிறகு அதிமுக தலைமைக் கழகக் கூட்டத்தில் முதல் முறையாக தர்ம யுத்தம் செய்தவர்களை ஒதுக்காதீர்கள் என்று ஓ.பன்னீர் பேசிய பேச்சு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்வதற்கான தொடக்கம் என்கிறார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள்.

No comments

Powered by Blogger.