இனநாயகத்தைக் காப்பாற்ற ஜனநாயகம் பேசும் சிங்களத் தலைவர்கள்

பெரும்பான்மையின இனநாயகத்தை (Majoritarianism) ஜனநாயகம் என்று கூறி இனநாயகத்தை காப்பதற்கான அரசியல் யாப்பையும்,
நாடாளுமன்றத்தையும், ஜனாதிபதி முறைமையையும், நீதித்துறையையும் வடிவமைத்த சிங்கள ஆட்சியாளர்களில் ஒரு பிரிவினரான ரணில் அணியினர் ஜனநாயகரீதியான அரசியல் யாப்பையும் நாடாளுமன்றத்தையும் பாதுகாக்கக் கோரிஅரசியல் நடாத்துகிறார்கள். இந்த ரணில் அணியினரின் ஜனநாயக அரவணைப்பிற்குள்  தமிழ்த் தலைவர்களும் அடங்குகிறார்கள்.

அதேவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பு அமைந்தால் அதற்குமாறாக ஜனநாயக அடிப்படையில் மக்கள் தீர்ப்பிற்கான பொதுவாக்கெடுப்பை’ மைத்திரி-ராஜபக்ஷ அணியினர்நடத்த உத்தேசிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.இலங்கையில் வளர்ச்சிபெற்றிருக்கும் சிங்கள-பௌத்த இனநாயகத்தின் அடிப்படையில் தாம் பொதுவாக்கெடுப்பில் வெற்றிகொள்ளமுடியும் என்று இத்தலைவர்கள் நம்புகிறார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைவற்கு முன்னான காலத்தில் ஏறக்குறைய சிங்களத் தலைவர்கள் அனைவருமே ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள். அனைத்து சிங்களத் தலைவர்களின் பெயர்களுக்கு முன்னால் இருக்கும் முதல் எழுத்துக்கள் அவர்கள் பின்பற்றிய ஆங்கிலிக்கன் கிறிஸ்தவத்தின் அடையாளங்களாக உள்ளன.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க முதல் டி.எஸ்.செனநாயக்க, டட்லிசெனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல,ஓலிவர் குணதிலக, வில்லியம் கோபல்லாவ,  ஜுனியர் ரிச்சர்ட் ஜெயவர்த்தனஎன அனைத்துத் தலைவர்களுக்கும் இது பொருந்துகிறது. இவ்வாறு சிங்களத் தலைவர்கள் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவத்திலிருந்து பௌத்திற்குமதம் மாறும் நிலையில் ‘ஏனைய சிங்கள ஆங்கிலிக்கன் கிறிஸ் தவமக்கள் மதம் மாறாமல் இருப்பதைப் பாதுகாப்பதற்கு 29வது சரத்துஉதவும் என்ற சிந்தனையின் அடிப்படையில் சோல்பரியால் கொண்டவரப்பட்ட ஏற்பாடுகூட ’நடைமுறையில் பயனற்றுப் போனது.

‘மன்னன் எவ்வழிமக்களும் அவ்வழியே’என்ற கூற்றிற்கு இணங்கசிங்கள–பௌத்த அலைமக்கள் மயப்பட்டு அதன்வழி இனவாதம் தெளிவான அரசியல் பொருளாதார நிறுவனவடிவத்தைப் பெற்றது. இது இலங்கையின் அரசியலை முழுநீள இனநாயகமாக வடிவமைத்தது. இந்த வடிவமைப்பில் சிங்கள–ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்களுக்கும் இடமில்லாமல் போனமை கருத்தூன்றி கவனிக்கப்படவேண்டிய வரலாற்று உண்மையாகும். இதைப் புரிந்துகொண்டால் இனநாயகத்தின் கொடுமுடியை புரிந்துகொள்வதில் கடினமிருக்காது.

மௌரியப்  பேரரசினது பேரரசவிருத்தியின் ஒரு பகுதியாக கி மு 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு அரச மதமாக பௌத்தம் வந்தபோது அனுராதபுர இராஜ்ஜிய மன்னன் தீஸன் பௌத்தத்திற்கு மதம்மாறி, அசோகசக்கரவர்த்தி வழங்கிய முடியை மீள்முடியாகத்தரித்துக் கொண்டான். அசோகசக்கரவர்த்தி வழங்கிய‘தேவநம்பிய’ என்ற முடிக்குரியபட்டப் பெயரையும் தரித்து தேவநம்பியதீஸனாய் அரியாசனம் அமர்ந்தபோது உயர்குழாத்து பிராதானிகள் அனைவரும் கூடவே பௌத்தர்களாக மாறி தமது பிராதானிப் பதவிகளை தக்கவைத்தனர்.

போர்த்துகீசர் காலத்திலும் மன்னன் தர்மபாலன் ‘டொன் யுவான்’என்றபோர்த்துசீச ஆதிக்கப் பெயருடன் தன்னை இணைத்து டொன் யுவான் தர்மபாலனாய் ஆட்சிபுரிந்தான். இவ்வாறே பிரித்தானியர் காலத்திலும் சிங்களத் தலைவர்கள் ஆங்கிலிக்கன் மதத்தைத் தழுவிஅரசியல் - நிர்வாக அதிகாரங்களில் அமர்ந்தார்கள். பின்பு ஆங்கிலேயர் நாட்டைவிட்டு வெளியேறக்கூடிய தருணத்தில் அவர்கள் மீண்டும் பௌத்தர்களாக மாறினார்கள்.

1931ஆம் ஆண்டுபிரித்தானியர் உருவாக்கிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற அரசியல் ஏற்பாட்டின் மூலம் அதிகாரம் பெரும்பான்மையினரான பௌத்தர்களை நோக்கிமாறும் சூழல் ஏற்பட்டபோது உயர்குழாத்து சிங்களத் தலைவர்களும் அரசியல் அதிகாரத்திற்காக பௌத்தர்களாக மாறத் தொடங்கினார்கள். இப்பின்னணயில் மதம் மாறிய பண்டாரநாயக்க முதலானோரை‘ டொனமூர் பௌத்தர்’ என அழைத்தார்கள்.

இங்கு இவர்களுக்கு அரசியல் அதிகாரம்தான் முக்கியமே தவிர மதம் அல்ல. எனவே இப்போது அரசியல் அதிகாரம் சிங்கள–பௌத்த மதத்தவர்களை மையமாகக் கொண்டு அமைவதால் அவர்கள் சிங்கள-பௌத்த இனநாயகம் பேசுவதையே தமது அரசியலாகக் கொண்டுள்ளார்கள். இந்த இனநாயக வாதிகளிடமிருந்து ஜனநாயகத்தை ஒருபோதும் எதிர்பார்க்கவும் முடியாது. இந்த இனநாயகவாதிகளின் பிடியிலிருந்து ஜனநாயகத்தை ஒருபோதும் மீட்கவும் முடியாது.

சிங்களத் தலைவர்கள் அனைவருமே இனநாயகவாதிகள். இதில் கட்சிபேதம் கிடையாது. ஐக்கியதேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒருநாணயத்தின் இருபக்கங்களென சிங்கள–பௌத்த இனநாயகத்தின் இருபக்கங்களாவர்.  இங்கு பேரினவாத ஆதிக்கத்தின் பொருட்டு இருகட்சிகளும்
 ஒன்றுக்கொன்று அநுசரணையானவையே தவிர ஒன்றுக்கொன்று எதிரானவையல்ல. அதாவது ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் போதுதமிழ் மக்களுக்கான உரிமைகளை அந்த ஆளும் கட்சியினர் வழங்காது இருப்பதற்கான அவர்களின் நிகழ்ச்சி நிரலை பாதுகாப்பதற்கு துணையாக எதிர்கட்சியினரான சுதந்திரக் கட்சியினரின் தமிழின எதிர்ப்பு உதவியாக அமையும்.

அதேபோல சுதந்திரக் கட்சியினர் ஆதிக்கத்தில் இருக்கும் போது அதே பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஆட்சியில் இருக்கும் அந்தச் சுதந்திரக் கட்சியினரும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ஐக்கியதேசியக் கட்சியினரின் எதிர்ப்புஉதவிக் கரமாய் அமையும்.

திருமதி சந்திரிகாவின் அரசியல் யாப்பு முன்மொழிவை 2000 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அணியினர் அவர் தலைமையில் நாடாளுமன்றத்தில் கிழித்தெறிந்தமை ஒரு நல்ல உதாரணமாக உள்ளது.

பொதுவாக ஏனைய அனைத்து இனங்களையும் குறிப்பாக ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதற்கான இனநாயக அரசியலை முடிவிற்குக் கொண்டுவர எடுத்த அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு எத்தனங்களையும் சிங்கள இனநாயக ஆட்சியாளர்கள் எப்பொழுதும் வெற்றி கொண்டுள்ளனர்.

உள்நாட்டில் தமிழ்த் தலைவர்கள் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக மேற்கொண்ட நாடாளுமன்ற வழிமுறைப் போராட்டங்கள், சாத்வீகவழி நேரடிப் போராட்டங்கள்,ஆயுதப் போராட்டங்கள், என அனைத்து வகை போராட்டங்களையும்  சிங்களத் தலைவர்கள் வெற்றி கொண்டனர்.

இதற்கு அப்பால் வெளிநாட்டு ரீதியில் அண்டைநாடான இந்தியா, ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அரசிற்கு சவாலாக அமைந்தபோது இந்தியாவின் புயபலத்தின் முன் நின்றுபிடிக்க முடியாதநிலையில் இந்தியாவை அரவணைத்து அதன் மூலம் இந்தியாவை மீளமுடியாத பொறிக்குள் சிக்கவைக்கும் ஒப்பந்தத்தின் வாயிலாகத மக்கான இறுதிவெற்றியை சிங்களத் தலைவர்ள் அடைந்தனர்.

அப்படியே இனப்படுகொலையின் பேரால் இலங்கை அரசிற்கு அமெரிக்காவும், மேற்குலகமும் சவாலாக அமைந்த போது, இனப்படுகொலைக்கு சர்வதேசநீதி கோரும் அமெரிக்காவின் நகர்வைகண்டு அஞ்சிய இலங்கை அரசு, சர்வதேச கலப்பு விசாரணைக்குத் தாம்தயார் என்று அமெரிக்கா மற்றும்  மேற்குலகுடன் இணைந்து ஐநாமனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்பு சர்வதேச கலப்புவிசாரணையை மேற்கொள்ளாமலும்,தமிழ் மக்களுக்கான நீதியான உரிமைகளை வழங்காமலும் கைவிட்டது. இதன் மூலம்அமெரிக்கா–பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலகையும் அது வெற்றிகொண்டு தன் தலையைக் காப்பாற்றியுள்ளது.

இவ்வாறுபார்க்கையில் சிங்கள இனநாயகமானது உள்நாட்டில் தமிழ்த் தலைவர்களை வெற்றிகொண்டது, அண்டைநாடான இந்தியாவை வெற்றிகொண்டது. உலகப் பேரரசான அமெரிக்காவையும் இதுவிடயத்தில் அது வெற்றிகொண்டுள்ளது.
சர்வதே சகலப்புநீதிப்  பொறிமுறை மூலம் போர்க்குற்ற விசாரணைக்கு ஒப்புக் கொண்ட ஜனாதிபதிசிறிசேன - பிரதமர் ரணில் ஆகியோர் அதனைக் கைவிட்டுவிட்டு அதற்குப் பதிலாக இப்போதுதாம் மல்யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சிகளைக் கண்டுகளிக்குமாறுசர்வதேசரசிகர்களைக் கோருகிறார்கள்.

இப்போது இனநாயகத்தின் ஒருபகுதித் தலைவர்கள் அரசியல் யாப்பு,நாடாளுமன்றம் என்பனவற்றிற்கான ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறுகோருகிறார்கள். இந்தஅரசியல் யாப்பையும், இந்தநாடாளுமன்றத்தையும், இந்தநீதித்துறையினையும் பாதுகாப்பதுஎன்பதுஉள்ளடக்கத்தில் இனநாயகத்தைபாதுகாப்பதாகஅமையுமேதவிரஒடுக்கப்படும், இன்னல் இழைக்கப்படும் தமிழரைப் பாதுகாப்பதாகஅமையாது.

சிங்கள இனநாயகத்தின் உள்ளடக்கம் இப்படித்தான்  அமைகிறது.
அதாவது அதற்கு நெருக்கடி வரும்பொழுது அதுகாலில் பணியும். அது நெருக்கடியில் இருந்து மீளும் பொழுதுதலையைச் சீவியெறியும்.நெருக்கடியை முதலீடாகக் கொண்டுஅரசியலைஅறுவடைச் செய்யத் தவறினால் தமிழ் மக்களுக்கான எந்தொரு உரிமையையும் ஒருபோதும் வெல்ல முடியாது.

2000ஆம் ஆண்டுவிடுதலைப் புலிகள் ஆணையிறவு முகாமைக் கைப்பற்றி முகமாலையைக் கடந்து யாழ் குடாநாட்டை முற்றையிட்டு உட்பிரவேசித்தபோது அங்கு நிலைகொண்டிருந்த  40,000 சிங்களப் படையினரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இந்நேரத்தில் புலிகளுடன் பேசி பத்திரமாக அந்த 40,000 படையினரையும் மீட்டுத் தருமாறு அப்போது இந்தியாவில் பதவியில்  இருந்த வாஜ்பாய் அரசாங்கத்திடம்  சந்திரிகா அரசாங்கம் உதவிகோரியது. இது பின்பு நடைமுறைப்படாது போனமை வேறுகதை. ஆனால் நெருக்கடி வரும்போது வீரம் பேசாது யாரிடமும் பணிந்துகீழ் இறங்கி தமது தேவைகளைப் பூர்த்திசெய்யும் வரும் அரசியல் பாரம்பரியம் சிங்களத் தலைவர்களிடம்  உண்டு.

அதேபோலபுலிகள் அரசியல் - இராணுவரீதியில் மேலோங்கியிருந்த சூழலில் காணப்பட்ட நெருக்கடிகளின் மத்தியில் ரணில் - பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தம் 2002 ஆம் ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகள் இலங்கை அரசியல் யாப்பில் காணப்படும் இறைமை தன்னாதிக்கம் பிரதேச ஒருமைப்பாடு என்னும்  அம்சங்களை மீறி விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்திற்குரிய பகுதியாக தமிழ் மண்ணின் பெரும்பகுதி ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது.

இப்படி இலங்கை அரசியல் யாப்பைமீறும் வகையிலான ஒப்பந்தத்தில் சந்திரிகா-ரணில் ஆட்சிக் காலப் பிரதமர் ரணில்விக்ரம சிங்ககை யெழுத்திட்டிருந்தார் என்பதும் கவனத்திற்குரியது.

எனவே நெருக்கடிகளின் மத்தியிற்தான் சிங்களத் தலைவர்கள் தமது இனநாயக ஆதிக்கத்திலிருந்து இறங்கிதமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை உருவாகும். ஆதலால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு உள்நாட்டு ரீதியிலும், வெளிநாட்டு ரீதியிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெறமுடியாது.ஆழமான அர்த்தத்தில் தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மீட்பது என்பதிலிருந் தேசிங்கள இனநாயகத்திற்கு முடிவுகட்டி ஜனநாயகத்தை  மீட்கமுடியும்.

இந்நிலையில் தமிழ்த் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை என்னவென்றால் இந்த நெருக்கடியின் பின்னணியில் சர்வதேச அரசுகளை சம்பந்தப்படுத்தி அவர்கள் வாயிலாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதாகும்.

எவ்வாறு நோர்வே வெளிவிவகார அமைச்சைமையமாகக் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை வெளியரசுள் முன்னெடுத்தனவோ அவ்வாறு ஒரு சர்வதேசசமாதானக் குழுவை உருவாக்கி அதன் வாயிலாக தமிழ் மக்களுக்கான தீர்வுகளை உத்தரவாதப்படுத்தி அவர்களின் ஈடுபாட்டுடன் அவற்றை நடைமுறைப்படுத்த தக்கபொறிமுறையை உருவாக்கவேண்டும்.

-மு.திருநாவுக்கரசு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.