நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் அரசியல் நாடகமே!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஊடக சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான தங்கவேல் ஜெகதீஸ்வரன் இதனைக் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் இடம்பெற்ற அரசியல் விடயங்களை நாம் நாடகமாகவே பார்க்கின்றோம். சர்வதேச ரீதியில் இலங்கைக்கு என்றுமில்லாதவாறு பாரிய அழுத்தம் காணப்பட்டது.யுத்தக் குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய அழுத்தம் காணப்பட்டது.
இவற்றிலிருந்து மீள்வதற்காகவே இந்த அரசியல் நாடகம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் தற்போது சிறந்த சூழல் காணப்படுகின்றது என்பதை சர்வதேசத்திற்கு காண்பிப்பதற்காக நீதித்துறை சீராக செயற்படுவதாக காண்பிக்கப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம்.
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு நீதித்துறை சீராகவும், நேர்மையாகவும் செயற்படுகின்றது. எனவே இலங்கையில் தற்போது சுமுகமான சூழல் காணப்படுகின்றது என்பதை சர்வதேசத்திற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒத்துழைத்துச் செயற்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளால் சர்வதேசத்தின் பார்வையை குறைப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாகவே நாம் பார்க்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை