கிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய பயிற்சி நெறி முன்னெடுப்பு
சமூக மாற்றத்தில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த பயிற்சிநெறியானது விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் செயற்படும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பயனாளிகளான பெண் செயற்பாட்டாளர்கள் சுமார் 40 பேர் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.
சுய சக்தியும் பங்கு பற்றலுடனும் கூடிய அபிவிருத்திக்காக பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தேவைகளையும் காத்திரமான முறையில் நவீன தொடர்பாடல் வசதிகளைப் பயன்படுத்தி முன்வைத்தல், தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு நவீன தொடர்பாடல் வசதிகளை குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
மேலும், சமகால சமூக இயங்கியல் முறைகளில் சமூக ஊடகங்களின் பாத்திரப் பங்கு, சமூக மாற்றத்தில் தமது முக்கிய பங்கினை ஏற்கத் தேவையான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல், வளர்ச்சியுடன் கூடிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தேவையான மனப்பாங்குகளையும் பெறுமானங்களையும் தனி நபர்களும் குழுக்களும் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்களில் செயலமர்வு நடத்தப்பட்டது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் வடபிராந்தியத்துக்கான ஆவணப்படுத்தல் அலுவலர் ஆர். கோமதி, சமூக இணைப்பு அலுவலர் ரீ. திவாகர் உட்பட பலர் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.




.jpeg
)





கருத்துகள் இல்லை