போதைப் பொருள் கடத்தல்: சிக்கிய நடிகை!

போதைப் பொருளை வீட்டில் வைத்திருந்த வழக்கில் மலையாள
நடிகை அஸ்வதி பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டயத்துக்கு அருகில் உள்ள சிங்காவனத்தைச் சேர்ந்த நடிகை அஸ்வதி பாபு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பலாச்சுவடு பகுதியில் டிடி கோல்டன் கேட்டில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அவரது வீட்டில் போதைப் பொருள் இருப்பதாக திற்காக்கரை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக அவரை காவல் துறையினர் கண்காணித்து வந்ததாக திற்காக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷைஜு ஏ.என் தெரிவித்துள்ளார்.
அஸ்வதி பாபு வீட்டில் நடத்திய சோதனையில் 58 கிராம் எடையுள்ள எம்டிஎம்ஏ என்ற போதைப் பொருள் சிக்கியுள்ளது. இந்தப் போதைப் பொருள் பார்ட்டியின் போது உபயோகப்படுத்தக்கூடியது. சிக்கிய போதைப் பொருளின் மதிப்பு பல லட்ச ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணையில் அவர் போதைப் பொருளை பெங்களூரிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதற்கு அவரது கார் ஓட்டுநர் பினோய் ஆபிரஹாம் உதவியுள்ளார். இதையடுத்து நடிகை அஸ்வதி பாபுவையும் பினோய் ஆபிரஹாமையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.