இயற்கை வளக் கொள்ளை: அரசுக்கு அறிவுறுத்தல்!
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவிலுள்ள கருங்கல் குவாரியில் சட்ட விரோதமாகவும், அனுமதி பெறாமலும், அனுமதி பெற்றாலும் கூடுதலாகக் கற்களை வெட்டி எடுப்பதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், சுப்பா ரெட்டி என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி சுப்பா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 17) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டார். நோட்டீஸின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் சுப்பா ரெட்டி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், சுப்பா ரெட்டியின் விளக்கத்தின் அடிப்படையில் சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இயற்கைவளங்களைப் பாதுகாப்பதற்கு அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென்று நீதிபதி தெரிவித்துள்ளார். அரசு தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகவும், குவாரிகளுக்கு அரசு கருணை காட்டக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சமூகத்தில் பிரபலமானவர்கள், செல்வந்தர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் துணையுடன் இயற்கைவளங்களும், கனிமவளங்களும் கொள்ளையடிக்கப்படுவதாகவும், இதை அரசு இரும்புக் கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார். மேலும், இயற்கைவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து விவரமறிந்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை