இனம் புரியா ஒரு வலி..!
ஊர் உறங்கிவிட்டது
இரண்டு மூன்று
தாதியர் மட்டும்
பிரசவஅறைக்குள்.
கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறாள்
என் தேவதை.
சிறு கீறல்கூட தாங்காத
அனிச்ச மலரவள்,
கருவான என் மகவின்
செல்ல உதைப்பைகூட
என்னிடம் முறையிட்டு
அதில் சுகம் கண்டவள்.
எப்படிப் பொறுக்கிறாள்
தாய்மையின் வலியை?
கல்யாண நாள் முதல்
என் தாயாக இருந்தவள்
கருவுற்ற நொடி முதல்
என் சேயாகிப்போனவள்.
மடிமீது உறங்கி
என் மார்பிலே புரண்டவள்
குழந்தையாய் எப்போதும்
எனக்குள்ளே தொலைந்தவள்
எப்படிப் பொறுக்கிறாள்
தாய்மையின் வலியை?
கண்ணாடி வழியாய்
கண்களின் பிணைப்பு
உதடுகள் இறுக்கி
விழிகளைச் சுருக்கி
சொல்லத்துடிக்கிறாள்
ஏதோ ஒரு சேதி.
அருகில் வா என்கிறாயா?
இனியொரு குழந்தை
வேண்டாமே என்கிறாயா?
கலங்கவேண்டாம் என்றெனக்கு
தைரியம்தான் சொல்கிறாயா?
என் இதய நரம்புகளை
இழுத்து இழுத்து
தைப்பது போல
இனம் புரியா ஒரு வலி.
உன் வலியை பறித்தெடுத்து
நான் சுமக்க மாட்டேனா
உள்ளத்தின் ஓரமெல்லாம்
உருகி உருகி அழுகிறது.
வீ----லென்ற சத்தம்,
மயங்கிச்சரிகிறாய்,
இரவின் நிசப்தம் கிழித்து
பூமியை ஸ்பரிசிக்கிறது
எம் காதலின் சாட்சி .
கோபிகை

.jpeg
)





கருத்துகள் இல்லை