ராட்சத அலையில் சிக்கிய மாணவிகள்!

பூம்புகாரில் ராட்சதக் கடல் அலையில்
சிக்கி மூன்று மாணவிகள் பலியாகினர். மீனவர்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இரண்டு மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ளது ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரி. சேத்தியாதோப்புவைச் சேர்ந்த சிவப்பிரியா, பழையாறுவைச் சேர்ந்த மஞ்சு, விவேகா, சிதம்பரத்தைச் சேர்ந்த அஜினா பானு, கடலூரைச் சேர்ந்த சங்கீதா, அன்னலட்சுமி, காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த வினிதா ஆகியோர் இக்கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தனர். இன்று (டிசம்பர் 19) விடுமுறை என்பதால், இவர்கள் 7 பேரும் பூம்புகாருக்குச் சுற்றுலா சென்றனர். அன்னலட்சுமியும் வினிதாவும் கரையில் இருக்க, மற்ற 5 மாணவிகளும் பூம்புகார் கடலில் இறங்கினர். அங்குள்ள காவேரி சங்கமம் கடல் பகுதியில் மூழ்கிக் குளித்தனர்.
மதியம் 12 மணியளவில் திடீரென்று எழுந்த ஒரு ராட்சத அலை அந்த மாணவிகளைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைக் கண்டதும் அன்னலட்சுமியும் வினிதாவும் அதிர்ச்சி அடைந்தனர். தோழிகளைக் காப்பாற்றுமாறு அலறிச் சத்தமிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்தனர் அப்பகுதியிலிருந்த மீனவர்கள். உடனே கடலுக்குள் பாய்ந்து மாணவிகளை மீட்க முயற்சித்தனர். இதில் அஜினா பானு, சங்கீதா இருவரும் மீட்கப்பட்டனர். இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவப்பிரியா, விவேகா, மஞ்சு மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்டன.
கடலில் இறங்கி குளிக்கக் கூடாது என பூம்புகார் கடற்கரையில் பல இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அதனை மாணவ மாணவிகள் பொருட்படுத்துவதில்லை. இதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கவலை தெரிவித்தனர் பூம்புகார் பகுதி மக்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.