ஜனவரி என்ன சொல்கிறது?

ஜனவரி மாதம் வெளியான நேரடித் தமிழ் படங்கள் 1. சாவி 2. ஓநாய்கள்
ஜாக்கிரதை 3. டிசம்பர்-13 4. பார்க்க தோணுதே 5. விதிமதி உல்டா 6. காவாளி 7. ஸ்கெட்ச் 8. தானா சேர்ந்த கூட்டம் 9. குலேபகாவலி 10. சமூக வலைதளம் 11. வீரத்தேவன் 12.மன்னர் வகையறா 13.பாகமதி 14. சரணாலயம் 15. நிமிர். ரிலீஸான எண்ணிக்கை 15 படங்களாக இருந்தாலும் இதில் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டவை ஆறு படங்கள் மட்டுமே.
பொங்கல் போட்டியில் விக்ரம் நடித்த ஸ்கெட்ச், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பிரபு தேவா நடித்த குலேபகாவலி ஆகியவை மோதின. மூன்று படங்களும் நட்சத்திர அந்தஸ்து, வியாபார முக்கியத்துவம் மிக்கதாக இருந்தும் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரம் ஆகவில்லை.
பெரும்பான்மையான திரையரங்குகளை விக்ரம், சூர்யா நடித்த படங்கள் ஆக்கிரமித்துக்கொள்ள, குலேபகாவலி குறைவான தியேட்டர்களில் ரிலீஸாகி தோல்விப் படமானது.
ஸ்கெட்ச் தமிழ் நாட்டில் 14 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. தொடர் தோல்வியைச் சந்தித்து வந்த சூர்யா, நம்பிக்கையுடன் எதிர்பார்த்த படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. மிகப் பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் தமிழகத்தில் இப்படம் 21 கோடி ரூபாய் அளவில் வருவாய் ஈட்டியது. இப்படம் ரிலீஸாவதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது முந்தைய படங்களுக்காக வாங்கிய கடன்களை ஃபைனான்சியர்களுக்கு திருப்பிக் கொடுக்காததால் படத்தை முடக்கும் முயற்சி நடைபெற்றது. இறுதியில் அனைத்துப் பஞ்சாயத்துகளும் தீர்க்கப்பட்டு படம் வெளியானது. சூர்யா படங்களுக்கு இருக்க வேண்டிய நியாயமான வசூல் இருந்தது.
மாத இறுதியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படம் ரிலீஸ் ஆனது. முதல் காட்சியில் திமுக இளைஞரணி, மாணவர் அணிகள் புண்ணியத்தில் கல்லா நிரம்பினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் வசூல் சரிவைச் சந்தித்து முதல் வாரமே பெரும்பான்மையான தியேட்டர்களிலிருந்து படம் தூக்கப்பட்டது.
ஜனவரியில் ரிலீஸ் செய்யப்பட்ட 15 படங்களில் ஸ்கெட்ச் மட்டுமே அனைவருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்த படமாகும். தானா சேர்ந்த கூட்டம் தயாரிப்பாளருக்கு லாபத்தையும், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.
எஞ்சிய படங்கள் அனைத்தும் முதலுக்கே மோசத்தை ஏற்படுத்தின. இம்மாதம் வெளியான படங்களில் மூன்று முக்கியமான இயக்குனர்களின் (விக்னேஷ் சிவன், ப்ரியதர்ஷன், ஜி.பூபதி பாண்டியன்) படங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.