இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்!

இந்தியாவில் மின்சாரத்துக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருவதால் அதைப் பூர்த்திசெய்வது இந்தியாவுக்குச்
சவாலான ஒன்றுதான் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
'இருள்: தெற்காசியாவில் மின்சாரத் துறை எவ்வளவு செலவு செய்ய வேண்டும்?' என்ற தலைப்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த சில ஆண்டுகளில் மின் விநியோகத்தில் இந்தியா சிறப்பான வளர்ச்சியைப் பதிவுசெய்து வந்தாலும், மின்சாரத்துக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்தியாவுக்குக் கடுமையான சவால்கள் காத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்தியா அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்திருந்தது. இருப்பினும் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தியா இத்துறையில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உலக வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.
சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் மதிப்பீடுகளின் படி, அதிக மக்கள் தொகை கொண்ட, நகரமயமாதலில் வேகமான வளர்ச்சியுடைய, சராசரியாக 7 சதவிகித பொருளாதார வளர்ச்சி இருக்கும் இந்தியாவில் 2018 முதல் 2040ஆம் ஆண்டுக்குள் மின்சாரத்துக்கான தேவை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் நிலக்கரி வாயிலான உற்பத்தியே இந்தியாவில் மேலோங்கி இருக்கிறது. மின்சார ஆலைகள் தங்களது மின்னுற்பத்தியில் 75 சதவிகிதம் அளவை நிலக்கரி வாயிலாகவே உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியைப் பொறுத்தவரையில் உலகின் முன்னணி மின்னுற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 70 கிகா வாட் அளவிலான மின்னுற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவை விட 50 சதவிகிதம் கூடுதலாகும்.

No comments

Powered by Blogger.