25ஆம் ஆண்டில் ‘கோவேறு கழுதைகள்’!

எழுத்தாளர் இமையம் எழுதிய கோவேறு கழுதைகள் நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்தும் இலக்கிய உலகில்
தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
பாண்டிச்சேரி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தில் தமுஎகசவின் சார்பில் கோவேறு கழுதைகள் 25 என்ற நிகழ்வு டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இமையம் எழுத்து சமூகத்தை மாற்றும் என்ற நம்பிக்கை இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.
நிகழ்வில் பேசிய இமையம், “நான் கோவேறு கழுதைகள் நாவல் எழுதும்போது பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இருந்த அரசியல் பார்வை, சமூக பார்வையோடு எழுதப்பட்டதுதான் இந்த நாவல். 1987 காலத்தில் தமிழகத்தில் தலித் என்ற சொல்லும், தலித் இலக்கியம் என்ற சொல்லும் பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை. ஆனால் நாவல் வெளிவந்த 1994 காலத்தில் தலித் என்ற சொல்லும், தலித் இலக்கியம் என்ற வகையும் தமிழகத்தில் இலக்கிய சொல்லாடலாக, அரசியல் சொல்லாடலாக மாறிவிட்டிருந்தது. அதனால் கோவேறு கழுதைகள் நாவல் தலித் விரோத நாவலாக எதிர்க்கப்பட்டது. நாவலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்கள் என்று ரவிக்குமார், ராஜகௌதமன், அ.ராமசாமி போன்றவர்களை சொல்லலாம். ஒரு வகையில் இந்த நாவலை பிரபலப்படுத்தியவர்கள் என்றும் அவர்களைச் சொல்லலாம். அந்த வகையில் அவர்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்.
கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு தமுஎகச – கோட்டக்குப்பம் கிளையின் சார்பில் நிகழ்வும் இந்த ஆய்வு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. 25 ஆண்டுகள் கழிந்த பிறகு ஒரு நாவல் குறித்து பேசப்படுவது என்பது அந்த நாவலின் தகுதியை காட்டுகிறது. நாவலை எழுதிய என்னுடைய தகுதியை காட்டுவதாக நான் கருதவில்லை. நாவல் அச்சான பிறகு அந்த நாவலுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இன்று மீண்டும் கோவேறு கழுதைகள் நாவலை எழுதச் சொன்னால் என்னால் முடியாது. 1987-90 காலகட்டத்தில் எழுத்தாளர்களிடமிருந்த சமூக மாற்றம் குறித்த நம்பிக்கை அப்படியே இன்றும் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அப்போது வறுமை இருந்தது. சமூகத்தை மாற்றிவிடுவோம், புரட்சி வந்துவிடும் என்ற பெரும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இன்று முழுமையாக என்னிடம் இருக்கிறது என்று என்னாலேயே சொல்ல முடியாது. எந்த இடத்தில் தோற்றோம்? ரஸ்யாவின் வீழ்ச்சி என்பது உலகமெங்கும் எழுத்தாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் காணாமல் செய்துவிட்டது. அன்று NCBH பெருமளவில் எழுத்தாளர்களைப் படிக்க வைத்தது. ஆனால் இன்று NCBH எழுத்தாளர்களைப் படிக்க வைக்கிறதா? இதை ரஷ்யாவின் வீழ்ச்சி என்று சொல்வதைவிட காலத்தின் வீழ்ச்சி என்று சொல்வது சரி என்று தோன்றுகிறது.
நான் என்னுடைய எழுத்துக்களை மனதிலிருந்தே எழுதுகிறேன். எழுத்தில் சாதித்துவிட்டோம் என்ற ஆணவம் என்னிடம் துளியும் இல்லை. தமிழ் இலக்கியம் என்பது இந்திய பெருங்கடலை போன்றது. நான் கரையோரம் நின்று கடலை பார்க்கிறவனாக இருக்கிறேன். சாதித்துவிட்டேன் என்று ஒரு எழுத்தாளன் நினைப்பானானால் அப்பொழுதே அவனுடைய வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது என்று அர்த்தம். நான் அதிகம் எழுதுவதை விட அதிகம் படிக்கவே விரும்புகிறேன். என்னுடைய எழுத்து ஏதோ ஒரு விதத்தில் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். வாசகனைத் தொந்தரவு செய்யாத எழுத்து இலக்கியம் அல்ல.
கோவேறு கழுதைகள் – 25 என்ற நிகழ்வை ஏற்பாடு செய்த தமுஎகசவின் கோட்டக்குப்பம் கிளைக்கு என்னுடைய அன்பு” என்று எழுத்தாளர் இமையம் பேசினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.