பிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை: நிதின் கட்கரி

பிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறத் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஒரு சிலர் வலியுறுத்தி வருவதாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவல் பாஜக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏஎன்ஐ, ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ”நான் தற்போதுள்ள பதவியிலேயே மகிழ்ச்சியாக உள்ளேன். கங்கை நதி தொடர்பான பல வேலைகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. பல விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் 13 முதல் 14 நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்படும். இதற்காகப் பல வேலைகள் கிடப்பில் உள்ளது. அவை முடிக்கப்பட வேண்டும். எனவே நான் தற்போது இருக்கும் பதவியிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் வேட்பாளராகும் எண்ணம் எனக்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு திட்டத்தையும் சரியாகச் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டியதுடன், முந்தைய அரசாங்கம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை புறக்கணித்தது என்றும் விமர்சித்தார்.
பாஜக ஆட்சியில் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வடகிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர், அருணாச்சல பிரதேசத்தின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.4000 கோடி மதிப்பிலான திட்டம் நடந்துகொண்டு இருக்கிறது என்றார். அங்கு, 400 கி.மீ. தூரத்திற்கு சாலை கட்டப்பட வேண்டும். அருணாச்சல பிரதேசம் ஒரு பெரிய பகுதி என்றாலும், அங்கு மக்கள்தொகை குறைவாக இருக்கிறது. அம்மாநிலத்தில், சாலைகள் இல்லாததால் தான் வறுமை மற்றும் வேலையின்மை ஏற்பட்டுள்ளது. சாலைகள் போட்டதும், அங்கு வேலைவாய்ப்பு உருவாகும். வறுமை ஒழியும் என்று கூறியுள்ளார் நிதின் கட்கரி.
மேலும், மெகா கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், தனித்துப் போட்டியிட்டு மற்ற கட்சியை வீழ்த்த முடியாது என்பதால் தான் கூட்டணி அமைக்கின்றன. இந்தக் கூட்டணி மகிழ்ச்சியால் இணையவில்லை, ஆதரவு இல்லை என்பதால் தான் இணைந்துள்ளன. பாஜக மற்றும் மோடி மீதான பயத்தால்தான் மெகா கூட்டணி அமைக்கின்றன என்று விமர்சித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.