பாடு நிலாவே





பாடு நிலாவே பாகம் 7

******* ***********
அந்த அம்மா, தண்ணீர் குடிக்கச்சொன்னதைக்கூட மறுத்துவிட்டு அவசரமாய் வந்த நண்பன், எண்ணங்களில் மூழ்கித்தவிப்பதைக் கண்டதும் மனம் வலித்தது இசையாளனுக்கு.
அவனது மனமும் நண்பனுக்காய் ஊரிலுள்ள எல்லா தெய்வங்களையும் அருகே அழைத்து மன்றாடிக் கொண்டிருந்தது. ஒருவாறு அந்த அம்மா சொன்ன முகவரியை அடைந்தனர்.
அவசரமாய் குதித்து இறங்கிய காங்கேசன் நொடிப்பொழுதில் படலைக்குச் சென்றுவிட்டதைக் கண்ட இசையாளனுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. தானும் இறங்கிக்கொண்டான். வாசலில் நின்று அழைத்த போது வெளியே வந்தவர் சாதனாவின் உறவினராகத்தான் இருக்கவேண்டும். உருவ ஒற்றுமை சற்றே இருந்தது.
“வாங்கோ ----வாங்கோ ---- யார் வேணும்,?” என்றபடி வந்தவரிடம்
“நான் காங்கேசன், இந்தியாவில இருந்து வந்திருக்கிறன், இவன் என்ர நண்பன் இசையாளன், நாங்கள் சாதனா---, அவ அப்பா ஈழவேந்தன் குடும்பத்தை தேடி வந்திருக்கிறம், உங்களுக்கு அவங்க விபரம் தெரியும் எண்டு பக்கத்து தெருவில சொன்னாங்க, அதான்---“ இழுத்தவனை ஆர்வமாய் பார்த்தவர்,
“ஓ-----நான் கூட உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சன், சாதனா காட்டின படத்தில இருந்தீங்கள், உங்கட குடும்ப படத்தை எங்கள் எல்லாருக்கும் காட்டினபோது பாத்தனான், எத்தினை வருசமாச்சு, ஆனாலும் மறக்கயில்ல” அவர் ஏதேதோ சொல்ல இதயம் எம்பி எம்பி குதித்தது இருவருக்கும்.
சட்டென்று “அந்த விபரம்?” இசையாளன் எடுத்துக்கொடுக்க,
“ஓ---தம்பி, எனக்கும் அவையின்ர விபரம் சரியாத் தெரியேல்ல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிச் சொல்லுகினம், முள்ளிவாய்க்காலில ஷெல் விழுந்து குடும்பத்தோட முடிஞ்சுது எண்டு சொல்லிச்சினம், ஆனா, இப்ப ஒரு மாசத்துக்கு முதல், என்ர நண்பர் ஒருத்தர் சொன்னார், சாதனா மட்டும் யாழ்ப்பாணத்தில ஒரு இல்லத்தில அருட்சகோதரிகளின்ர பராமரிப்பில இருக்கிறாள் எண்டு, அதுவும் தன்ர மகளைப் பாக்கப்போகேக்க கண்டதா சொன்னவர், உண்மைபொய் தெரியாது, அவளின்ர அப்பா தங்கமான மனுஷன், கடைசியில உருத்தெரியாம சிதைஞ்சு போனதைத்தான்----“ சொல்லிவிட்டு குலுங்கி அழுதவரை தேற்ற வழிதெரியாது இருவரும் தயங்கி நின்றனர்.
சட்டென்று அவரது கரம் பற்றிய காங்கேசன், “ சாதனாவுக்கு அப்பிடி எதுவும் ஆகியிருக்காது, நீங்கள் அந்த இடத்தை தெளிவாச்சொல்லுங்க, நாங்க இப்பவே புறப்படுறம்,” வாய் வார்த்தைகளை உச்சரித்தபோதும் மனம் எதைஎதையோ எண்ணித் துடித்தது காங்கேசனுக்கு.
வாகனம் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தது. இருவரும் ஒருவரோடு ஒருவர் எதுவும் பேசவேயில்லை. அங்கும் இங்கும் என விசாரித்து, கையிலிருந்த விலாசத்தைக் கண்டுபிடித்த பின்னர்தான், நண்பனை நிமிர்ந்து பார்த்தான் இசையாளன். அவசரமாய் இறங்கிக்கொண்ட இருவரும் காவலாளியிடம் பேசிவிட்டு உள்ளே சென்று அவ்விடுதியின் பொறுப்பில் இருந்த அருட்சகோதரியைச் சந்தித்து விபரம் கூற,
“மன்னிக்கவேண்டும் மகனே, இங்கே நாங்கள் ஆண்கள் தனியே என்றால் பார்க்க அனுமதிக்கிறதில்லை” என்றார்.
சட்டென்று கரங்களைக் கூப்பிக்கொண்ட காங்கேசன், “ஒரே ஒரு தடவை மட்டும் பாக்க விடுங்க, தூரத்தில இருந்து வந்திருக்கேன்” என்றான். அவனது தோற்றத்தில் என்ன கண்டாரோ
“ அதோ அந்த பூமரங்களுக்கிடையில இருக்கிற கதிரையில இருங்கோ, நான் போய் சொல்லிவிட்டு வாறன்” என்றவர், “சாதனா தனக்கு யாருமே இல்லைன்னு சொன்னா,” என்றார்.
“நான்-- நான் ---தூரத்து உறவு, நிறைய வருசம் தொடர்பே இல்லை ” மென்று விழுங்கியவனை வியப்பாய் பார்த்தபடி நடந்தார் அவர். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பை இந்த சமூகம் எப்படி பார்க்கிறதோ என எண்ணியவன்,மௌனம் காத்தான்.
நேரம் நகராதது போல தோன்றியது காங்கேசனுக்கு. சில நிமிடங்கள் ஆழ்ந்த துடிப்பில் கரைய சக்கர நாற்காலியின் ஓசை காதை நிரப்பியது. திரும்பிப் பார்த்த இசையாளன், “மச்சி பாருடா, இது சாதனா இல்லைப்போல, வேற மாதிரி” இவன் சொல்லி முடிப்பதற்குள் விருட்டெனத் திரும்பிய காங்கேசன், சிலையாய் நின்றான்.
ஒட்டி உலர்ந்த தேகமும் கண்ணாடி நிரப்பிய விழிகளும் குச்சி குச்சியாய் கைகளுமாய் சக்கர நாற்காலியை நிரப்பியிருந்தது ஒரு உருவம்.
“டேய், காரு --- நீயாடா? எங்கடா இருக்கிறாய்?” உரத்து அழைத்தவளை ஓடிச்சென்று பற்றிக்கொண்டான் காங்கேசன்.
“சா ---து----, சா ----த ---னா” வேறு எதுவும் பேசமுடியாது அவன் விம்ம, அவனது கரங்களை இறுகப்பிற்றியபடி மௌனமாய் இருந்தாள் அவள்.
“சாதனா --- இப்பவாச்சும் அழு, மனசு உடைஞ்சு அழு, இப்பிடி மனசில பூட்டிவைச்சு உன்னை நீயே வதைச்சிக்காத, என்கிட்ட சொல்லி அழு, நீ தவிச்ச தவிப்பை சொல்லு, பட்ட வேதனையைச் சொல்லு, உன் வலியைச் சொல்லு, நான் கேட்டுக்கிறேன், சொல்லு சாது, மௌனமா மட்டும் இருக்காத, ” உலுக்கியபடியே கதறினான் காங்கேசன்.
பார்த்துக்கொண்டிருந்த இசையாளனுக்கு வெள்ளமாய் உடைப்பெடுத்தது கண்ணீர்.
“காரு, நீ எப்பவும் சொல்லுவியே டா, பெரிய ஆளா வருவேன் என்று, இப்ப பாத்தியா, ரெண்டுகண்ணும் தெரியாம, ஒரு காலும் இல்லாம, ஏண்டா நான் உயிரோட இருக்கணும்?” குலுங்கிக் குலுங்கி அழுதவள் அவன் தோளின் மீதே சாய்ந்து விம்மினாள்.
எந்தக்கண்களில் அவன் நட்பைத் தரிசித்தானோ அந்தக் கண்கள் இருண்டு கிடந்தது, அவனோடு போட்டிபோட்டு நடந்த கால்களில் ஒன்றை எறிகணை தின்றிருந்தது. கடவுளே, என் சாதனாவுக்கா இந்த நிலை, உள்ளமோ மீண்டும் மீண்டும் புலம்பித் தீர்த்தது.
அருகில் வந்து தன் கரம் பற்றிய இசையாளனை நிமிர்ந்து பார்த்தான் காங்கேசன். ‘நீயே உடைஞ்சுபோனா நொறுங்கிப்போயிருக்கிற சானாவுக்கு யார் ஆறுதல் சொல்வது?’ எனக்கேட்பது போல இருந்தது அந்தப்பார்வை.

தொடரும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.