மறுமணம் செய்துகொள்ளும் புதின்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது இரண்டாவது திருமணம் பற்றி மனம் திறந்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் அதிபராக தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவி வகித்துவருகிறார் விளாடிமிர் புதின். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 76 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவர் 2024ஆம் ஆண்டுவரையில் அந்நாட்டின் அதிபராகப் பதவியில் நீடிப்பார். அமெரிக்காவின் நேரடி எதிர்ப்பு நாடாக இருக்கும் ரஷ்யாவின் அதிபராக புதின் இருந்தாலும், எப்போதும் தனிப்பட்ட குடும்ப வாழ்வின் மீதும் கவனம் செலுத்துபவராகவே உள்ளார்.
66 வயதாகும் புதினுக்கு 30 வயதில் 2 மகள்கள் உள்ளனர். ஆனால் தனது மகள்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக்கூட புதின் வெளியிட்டதில்லை. இவர் 1983ஆம் ஆண்டு லியூத்மிலா புதினா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்து வந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து விளாடிமிர் புதின் அந்நாட்டு முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையும் அரசியல்வாதியுமான அலினா கபேவாவுடன் தொடர்பில் இருந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இதைப் பற்றிய உண்மையான விளக்கத்தை அளிக்காமல் அமைதிகாத்து வந்த புதின், மறுமணம் பற்றிய தனது நிலைப்பாட்டை தற்போது தெரிவித்துள்ளார். இதனால் அலினா கபேவாவுடன் புதின் தொடர்பில் இருந்தது உண்மைதான் என்று ரஷ்ய ஊடகங்கள் மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளன.
சர்வதேச உறவுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைகள் குறித்த ரஷ்யாவின் வருடாந்தரப் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் புதினிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் எப்போது மறுமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள், யாரை மறுமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என்ற கேள்வியையும் பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர். அதற்குப் பதிலளித்த புதின், "நான் ஒரு மரியாதைக்குரிய நபர், நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியது அவசியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் புதின் மறுமணம் செய்துகொள்வது உறுதியாகியுள்ளது. ஆனால் எப்போது, யாரை என்பதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக 2016ஆம் ஆண்டிலேயே அலினா கபேவாவின் குடும்பத்தினருக்குத் தனது சொத்துகளை புதின் கைமாற்றியிருந்ததாகவும் தகவல் வெளியானது.

No comments

Powered by Blogger.