சிங்கத்தைக் காமெடியாகப் பார்த்ததுண்டா?

அன்னம் அரசு
“வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்” என்னும் பழமொழிக்குப் பொருத்தமான திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

ஹீரோ போலீஸாக இருக்கும் படங்களில், யாருமே பிடிக்க முடியாத ரவுடிகளை அடித்து, துவைத்துப் பிடிக்கும் போலீஸாகவே அவர் சித்திரிக்கப்படுவார். ஊரே பார்த்து... ஏன் போலீஸே பார்த்து நடுங்கும் அந்த தாதாவைச் சாதாரண கான்ஸ்டபிள் பிடிப்பதுதான் உச்சக்கட்ட காமெடியாக (ஆக்‌ஷனாக) இருக்கும். அது போன்றதொரு ஹீரோதான் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்திலும் வருகிறார். ஊரே பார்த்து கிடுகிடுக்கும் அந்த தாதாவை ஹீரோ எப்படிப் பிடித்தார் என்பதை காமெடி கலந்த திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் செல்லா ஐய்யாவு. அதிலும் படத்தின் க்ளைமேக்ஸில் ரஜினி ரசிகர்களுக்கான விருந்தும் இருப்பது கூடுதல் சிறப்பு.
எளிமையான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு படம் பார்க்க வரும் மக்களை இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து சிரிக்க வைக்கிறது படம். இது போன்று தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படத்தில் பார்க்கும்போது அதைப் புதிதுபோல் பார்க்க வைத்திருப்பது இயக்குநரின் திறமை.
படத்தின் ஆரம்பம் சற்றே சறுக்கலாக இருந்தாலும் யோகி பாபு, கருணாகரன், ஆனந்தராஜ் போன்றோர் திரையில் தோன்றிய பின்பு படம் வேறொரு பரிணாமத்தை எட்டுகிறது. இது நகைச்சுவைப் படமாக இருந்தாலும், இடையிடையே காவல் துறையைக் கலாய்த்த இடங்களில் கொஞ்சம் கருணை காட்டியிருந்திருக்கலாம். அதிலும் ஒரு காட்சியில் ஆஃப் பாயிலுக்காகச் சண்டை போடும் நாயகன் அநியாயத்தைக் கண்டு தட்டிக் கேட்காமல் இருப்பது, காவல் துறையினர் பெரிய பெரிய கேஸை எல்லாம் விட்டுவிட்டு சின்னச் சின்ன கேஸுக்காக மெனக்கெடுவதைச் சுட்டிக்காட்டுகிறாரோ இயக்குநர் என்ற கேள்வி எழுகிறது.
விஷ்ணு விஷால், தனது இன்னசண்ட் நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். வழக்கமான கதாநாயகியாக வந்து போகிறார் ரெஜினா கசாண்ட்ரா. யோகி பாபுவின் உருவத்தை வைத்துக் கலாய்த்து வந்த தமிழ் சினிமாவின் போகிலிருந்து இந்தப் படம் வேறுபடுகிறது. அவர் வரும் காட்சிகள் அல்ட்டிமேட். கருணாகரனும் தனது பாணியில் வழக்கம் போல் மைண்ட் வாய்ஸால் ஸ்கோர் செய்கிறார். தாதா கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சாய்ரவி மிரட்டலிலும், காமெடியிலும் மனம் கவர்கிறார்.
லிவிங்ஸ்டன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், மாரிமுத்து, சிங்கமுத்து, சவுந்தரராஜன் போன்றோர் ஆங்காங்கே வந்தாலும் கவனிக்கும்படி நடித்திருக்கிறார்கள்.
பிக் பாஸுக்குப் பின் ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் ஓவியாவின் பெருந்தன்மை தெரிகிறது. ஒரு குத்துப்பாடல் ஆடியிருப்பதோடு, துணை நடிகை போல ஒரு சில காட்சிகளிலேயே வந்து செல்கிறார் .
இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். லக்ஷ்மணின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும் இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதைப் பூர்த்தி செய்திருக்கின்றன.
ஆள்பலம், பணபலம் என வலியவனாக மட்டும் இருந்தால் போதாது, மதி உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்ற மையக்கருவை வைத்து நல்ல நகைச்சுவை படத்தைக் கொடுத்திருக்கும் படக்குழுவுக்குப் பாராட்டுகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.