டிவி, கணினிகளுக்கு வரிக் குறைப்பு!

டெல்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31ஆவது கூட்டம்  (டிசம்பர் 22) டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 28 விழுக்காடு மற்றும் 18 விழுக்காடு வரி விதிப்பில் இருந்த பல்வேறு பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நடவடிக்கையால் அதிகபட்ச வரியான 28 விழுக்காடு வரி வளையத்தில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவரான ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் எந்தெந்தப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது என்பது குறித்துக் காண்போம்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, அதன் தாக்கத்தை பொதுமக்கள் நேரடியாக உணர்ந்தவற்றில் ஒன்று திரையரங்கக் கட்டணங்கள். ஜிஎஸ்டிக்குப் பிறகு திரைப்பட டிக்கெட்டுகளுக்கான கட்டணங்கள் ஒரே அடியாக 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டன. திரைப்பட டிக்கெட்டுகளுக்கான வரி விதிப்பை 28 விழுக்காடாக உயர்த்தியதே இதற்குக் காரணமாக இருந்தது. அதற்குப் பிறகு 18 விழுக்காடு வரி வளையத்திற்குள் திரைப்பட டிக்கெட்டுகள் கொண்டுவரப்பட்ட பிறகும்கூட டிக்கெட் விலை 100 ரூபாய்க்கு மேலாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது இதன் மீதான வரி விதிப்பு மீண்டும் குறைக்கப்பட்டு 12 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான விலை குறையவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு முன்பு வரை அதிகபட்ச வரி விதிப்பான 28 விழுக்காடு வரி வளையத்துக்குள் 34 பொருட்கள் இருந்தன. தற்போது இவற்றில் 6 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்ச வரி விதிப்புப் பட்டியலில் தற்போது 28 பொருட்கள் மட்டுமே உள்ளன. கணினி மானிட்டர்கள், தொலைக்காட்சி ஸ்கிரீன்கள், டயர்கள், பவர் பேங்க் ஆகியவற்றுக்கான வரி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான வண்டிகளுக்கான வரி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு காப்பீடுகளுக்கான வரி 18 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டணங்களில் எகனாமி கிளாஸ் வகுப்புக்கான வரி 5 விழுக்காடாகவும், பிசினஸ் கிளாஸ் வகுப்புக்கான கட்டணம் 12 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அருண் ஜேட்லி, ஆடம்பரமான பொருட்கள் மட்டுமே தற்போது 28 விழுக்காடு வரி விதிப்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.