மகளிர் விடுதி விவரம்: ஆட்சியருக்கு உத்தரவு!

மகளிர் தங்கும் விடுதியின் விவரங்களைப் பதிவு செய்ய 6 மாத கால அவகாசம்கோரி விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 4ஆம் தேதியன்று, சென்னை ஆதம்பாக்கம் மகளிர் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்குப் பின் தனியார் விடுதிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். அதன்படி அனைத்து விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் விடுதி உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். பதிவுச்சான்று உரிமம் இல்லாமல் விடுதி நடத்தினால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவித்திருந்தார் சண்முகசுந்தரம்.

“காவல் துறை, சமூகநலத் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பதிவு, உரிமச் சான்று பெற அனுமதி பெற வேண்டியிருப்பதால், பெண்கள் தங்கும் விடுதிகளைப் பதிவு செய்ய 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்” என சென்னை பெண்கள் விடுதி உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 22) நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன்பு வந்தது. அப்போது, விடுதிகளுக்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து 2 வாரத்தில்உத்தரவு பிறப்பிக்குமாறு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film

No comments

Powered by Blogger.