பல்கலைக்கழக வளாகத்தில் மனித வெடிகுண்டு!

ஸ்ரீராம் சர்மா

மார்கழிக் குளிரும் மெரீனாவின் சில்லிடும் காற்றும் பின்னிப் பிணைந்து பிடரியை உரசிக் கொண்டிருந்த அந்த இரவில், புராதனக் கட்டிடங்களோடு கூடிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் முற்ற வெளி அமைதியான அமானுஷ்யத்தை மெல்லக் கசிய விட்டுக்கொண்டிருந்தது. ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் நிறைந்திருக்க பதினெட்டாம் நூற்றாண்டின் வெற்றி வரலாறான வேலு நாச்சியார் வரலாற்றில்...

அவரது உடையாள் படைத் தளபதியாக இருந்தவரும், உலகின் முதல் மனித வெடிகுண்டாக வெடித்து வெள்ளையரைத் திகைக்க வைத்தவருமான “குயிலி” யின் வீரத் தியாக வரலாறு தெருக்கூத்து வடிவத்தில் கோலாகலமாக அரங்கேற்றப்பட்டது. திருவள்ளூர் பொன்னியம்மன் தெருக்கூத்துக் குழுவினர் தங்களது தத்ரூபமான நடிப்பாற்றலால் கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்கச் செய்தனர்.
நகரச் சூழலிலேயே வளர்ந்து விட்ட என்னைப் போன்றவர்களைத் தங்கள் கலை வீச்சினால் திக்குமுக்காடச் செய்தார்கள் ஆழங்காற்பட்ட அந்த எளிய கலைஞர்கள். தன்னம்பிக்கை ஒளிர வெளிப்படும் அவர்களது கலை வீச்சு அபாரமானது. அடிப்படையில் சில ஒழுங்குகளை வைத்துக்கொள்கிறார்கள். மற்றபடி களத்தில் கிடைப்பதையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். “ஒழுங்கற்ற ஒழுங்கு” என்பதில் உள்ள பேருண்மையை ஆர்பாட்டம் இல்லாமல் அநாயசமாகக் கடத்துகிறார்கள்.
திடீரென்று கார்டு லெஸ் மைக்கை எடுத்துப் பேசுகிறார்கள். களத்தின் மையமாக வைக்கப்பட்டிருந்த மைக்குக்கு வந்தும் பேசுகிறார்கள்.
சிலநேரம் ஒலிபெருக்கியே இல்லாமல்ஆடியன்ஸை அணுகிப் பேசுகிறார்கள். மேடைக்கு உரிய எல்லைகளை எல்லாம் சர்வசாதாரணமாகக் கட்டுடைத்து நேரடியாகவே கம்யூனிகேட் செய்கிறார்கள்.
நாமும் கூட எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆவென்று வாய்பிளந்தபடி ஆவலோடு அவர்கள் சொல்ல வருவதை கவனித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆதிக்கலைக்காக ரகஸியமாக ஏங்கும் நம் ஆழ்மனதின் சூட்சுமம் அங்கே ஓர் காட்டுக் குருவி போல் கலவிப்பட்டுக்கொள்கிறதோ !?
தங்களுக்குள் சில பல பரிபாஷைகளைப் பரிமாறிக்கொண்டு இடவலமாக நகர்ந்துகொள்கிறார்கள். சடுதியில் அடுத்த கேரக்டரைக் களத்துக்கு அழைத்து அறிமுகப்படுத்துகிறார்கள்.
திரை மறைவு என்பதெல்லாம் இல்லை.
மொத்த கேரக்டர்களும் பட்டவர்த்தனமாக ஆங்காங்கே நின்றிருந்தாலும் குறிப்பிட்ட தருணத்தில் நிகழும் காட்சி என்ன என்பதையும் அதன் நாயக நாயகியர் யார் யாரென்பதையும் சொல்ல வரும் செய்தி இதுதான் என்பதையும் பளிச்சென்று ஆடியன்ஸ் மனதில் ஏற்றிவிடுகிறார்கள்.
இதுவரை சீராக நிர்வகிக்கப்பட்ட நகர மேடைகளையே கண்டிருந்த சென்னைவாழ் மக்களுக்கு தெருக்கூத்துக் கலைஞர்களின் வடிவம் முற்றிலும் புதிய அனுபவமாகவே இருந்தது.
சாதாரண விவசாயக் குடிகள் நாங்கள்;
சாதிக்க வைத்தது யார் வேலுநாச்சி!
தாயாகி நின்றாளே எம்மைக் காக்க
ராக்காத்தாள் இல்லாத குறையே போச்சி!
என்றபடி ரூபன் என்னும் அந்த விளைந்த கலைஞன் குயிலியாகத் தோன்றி வந்து நின்றபோது பெருங்காற்று சுழன்றடித்தது. எங்கள் தெருக்கூத்து அனுபவத்தில் இது சுபசகுனம் என்று எடுத்துச் சொல்லி பொன்னியம்மன் தெருக்கூத்துக் குழுவினர் நெகிழ்ந்துகொண்டார்கள்.
குயிலியின் தந்தை பெரிய முத்தனாகத் தோன்றிய மூத்த கூத்து வாத்தியார் கமலக்கண்ணன் ஐயா,
“விசுவாசக் காரனென்று என்னைச் சொல்வார்;
அதுபோதும் அடியேனே பெரிய முத்தன்...”
என்று உரத்த குரலில் பாடி அவையோரை கட்டி இழுத்து நெகிழ வைத்தார்.
வேலு நாச்சியாராக தோன்றிய ரஜினிகாந்த் என்னும் கூத்தாசிரியர் கம்பீரத்தையும் கனிவையும் ஒருசேரக் காட்டினார். குயிலியின் தாய் ராக்காத்தாளாகத் தோன்றிய ராமலிங்கம் என்னும் கூத்தாசிரியர் உச்சஸ்தாயியில்...
“சரமடித்தால் பிளக்கும் பலா தேக்கு;
நான்
பெரிய முத்தன் மனைவியான ராக்கு!”
என்றபடியே அறிமுகமாகி அரங்கு நிறைத்தார்.
கர்னல் பாஞ்சோராக நடித்த அமல் ஜோசஃப் அட்டகாசப்படுத்தினார்.
வீரத் தளபதி குயிலி தெருக்கூத்தின் இறுதிக் காட்சியில் பம்பை உடுக்கை அதிர, மேள தாளங்கள் ஓங்க, பறைகள் முழங்க, வைக்கோல் பிரியை வளையமாக வைத்துத் தீமூட்டி அது தகதகவென்று எரிய, உள்ளே பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருக்க, அதன் மத்தியில் வீரக் குயிலி எகிறி குதித்த போது அரங்கம் உச்சகட்ட எழுச்சிக்குச் சென்றது.
குயிலியாகத் தோன்றித் தன்னை மறந்து ஆடி நடித்த ரூபன் என்னும் அந்த மகா கலைஞன் மூர்ச்சையாகி விழுந்தான்.
இந்த மண்ணின் விடுதலைக்காகத் தன் இன்னுயிரை ஈந்து மறைந்த பதினெட்டாம் நூற்றாண்டின் வீரத் தளபதி குயிலியின் ஆன்மாவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் முகமாக மொத்த அரங்கமும் எழுந்து நின்றது.
மனம் நிறைந்தது.
மறக்கடிக்கப்பட்டதோர் வரலாற்றுக் கதாபாத்திரம் தலைநகர மண்ணில் நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழர்கள் நன்றியுடையவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை ஓங்கி நிரூபிக்கப்பட்டுவிட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையும் அதன் முற்றம் அமைப்பும் வரலாற்றில் அழியாப் பெருமையைத் தேடிக்கொண்டன.
குயிலியின் வீரத் தியாகத்தைக் கண்ட அந்தச் செந்நிறக் கட்டிடம் மேலும் சிவந்து ஒளிர்ந்தது.
இந்தத் தெருக்கூத்துப் படைப்பை எழுதிய கணத்தில் என் மனதுள் கண்ட காட்சிகளை எல்லாம் மெருகூட்டப்பட்ட கலைவடிவமாக நேரில் காணத் தந்த ஈடு இணையற்ற அந்த தெருக்கூத்துக் கலைஞர்களை இருகரம் கூப்பி நன்றியோடு தொழுது நிற்கிறேன்.
“வீரத் தளபதி குயிலி” தெருக்கூத்தை தங்கள் பகுதிகளில் நிகழ்த்தக் கேட்டு பொன்னியம்மன் தெருக்கூத்துக் குழுவினருக்கு ஏராளமான அழைப்புகள் குவிந்து வருகின்றன.
இனிதே நிகழட்டும். தமிழகமெங்கும் நிகழட்டும். தேசமெங்கும் நிகழட்டும். குயிலியின் உன்னத வரலாறு நம் மண்ணுக்கே உரிய நாட்டார் கலையுடன் சேர்ந்து உலகமெங்கும் பரவட்டும்.
தென்னாட்டுக் குழந்தைகளுக்கு ஜான்ஸி ராணி என்று பெயர் சூட்டப்படுவது போல வட நாட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு வேலு நாச்சியார் - குயிலி என்று பெயர் சூட்டப்படட்டும்.
அது, நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் இதயாஞ்சலியாக இருக்கட்டும். ஈடு இணையற்ற அந்த பதினெட்டாம் நூற்றாண்டுக்கு நாம் செய்யும் கைமாறாக அமையட்டும்.
வாழிய குயிலி!
வாழிய தமிழகம்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.