காதல்: தெலங்கானா பெண் ஆணவக் கொலை!

கடந்த செப்டம்பர் மாதம் தலித் சமூகத்தவரான பிரனய் என்பவரும், கடந்த நவம்பர் மாதம் ஒசூர் அருகே
சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்திஷ்-சுவாதி ஆகிய இருவரும் ஆணவக் கொலைக்குப் பலியான நிலையில் தெலங்கானாவில் மீண்டுமொரு ஆணவப் படுகொலை நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மஞ்செரியல் மாவட்டத்திலுள்ள கலமதுகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிந்தி அனுராதா (22) என்பவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (26) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். அனுராதா பத்மசாலி என்ற சமூகத்தைச் சார்ந்தவர். யாதவா சமூகத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர்களுடைய காதல் விவகாரம் பெண்வீட்டாருக்குத் தெரிய வந்ததையடுத்து, இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதியன்று அனுராதா லட்சுமணன் இருவரும், ஹைதராபாதிலுள்ள ஆர்ய சமாஜ் அமைப்புக்குச் சொந்தமான கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். மூன்று வாரங்களுக்குப் பிறகு, இவர்கள் இருவரும் ஜன்னராம் பகுதியிலுள்ள போலீசாரின் பாதுகாப்பை நாடினர்.
கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 22) அன்று மாலை 7 மணியளவில், லட்சுமணன் வீட்டில் காதல் தம்பதியை விட்டுச் சென்றனர் போலீசார். இவர்களின் வருகையை அறிந்த அனுராதாவின் பெற்றோர், தங்கள் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து லட்சுமணன் வீட்டிற்குச் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்து வலுக்கட்டாயமாக அனுராதாவைத் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரைச் சரமாரியாகத் தாக்கினர். இதனால் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து, நிர்மல் மாவட்டம் மல்லபூர் கிராமத்திலுள்ள மலைப்பகுதிக்கு அனுராதாவின் உடலைக் கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் தீ வைத்து எரித்துவிட்டனர் அவரது உறவினர்கள். அருகிலுள்ள ஆற்றில் அவருடைய சாம்பலைக் கரைத்து விட்டு நேற்று (டிசம்பர் 23) வீடு திரும்பினர் அனுராதாவின் பெற்றோர்.
இது குறித்து லட்சுமணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் அனுராதாவின் பெற்றோரைக் கைது செய்தனர்; போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.