சென்சாரில் க்ரீன் சிக்னல்!

அஜித், நயன்தாரா இணைந்து நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
வெளியாகவுள்ளதால் ரிலீஸ் பணிகள் வேகமெடுத்துள்ளன.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தைப் பார்த்த தணிக்கை துறை அதிகாரிகள் எந்த இடத்திலும் வெட்டாமல் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதத்தில் உருவாகியுள்ளதாகத் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் தெரிவித்துள்ளார். “சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் "விஸ்வாசம்" படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் "யு" சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குநர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள். எல்லாத் தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
படத்தின் இசை குறித்து கூறியுள்ள அவர், “இசையமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாட்டத்துக்கு உகந்தவாறு பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்தப் படத்தின் பாடல்கள் செம ஹிட்" என்று தெரிவித்துள்ளார்.
விவேக், தம்பி ராமையா, யோகி பாபு ,ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். டி இமானின் இசையில் , ரூபன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டார். இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் படத்துடன் சேர்ந்து களமிறங்கும் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்திற்குத் தணிக்கை துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
Powered by Blogger.