கிளி ஜோதிடர் வெட்டிக் கொலை!

திருப்பூரில் பெண்களை வசியம் செய்வதாகக் கூறி கிளி ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள பாரதி புதூரைச் சேர்ந்தவர் ஜே.ரமேஷ் (எ) குமார் (35). இவர் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்து வந்துள்ளார். இவர் இன்று பகல் பென்னி காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரை ஹெல்மெட் அணிந்து கொண்டு பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்த ஜோதிடர் கீழே விழுந்துள்ளார்.
பின் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி கோபத்துடன் ஏதோ கூறுகிறார் அந்த மர்ம நபர். பின்னர் கீழே விழுந்து கிடந்த ஜோதிடரை ஆத்திரத்துடன் அரிவாளால் வெட்டுகிறார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது அந்த நபரை அங்கிருந்தவர்கள் யாரும் பிடிக்கவோ, விரட்டவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடரை வெட்டிய அந்த நபர், தான் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக கூறிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர் துண்டு பிரசுரங்களைச் சாலையில் போட்டுச் சென்றுள்ளார்.
அதில், பூங்காவுக்கு முன்பு ஜோதிடம் செய்து வந்த ரமேஷ் பல பெண்களை வசியம் செய்து பாலியல் தொழில் செய்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் சில அரசியல்வாதிகளும், விஐபிகளும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயன்றதைக் கண்டுபிடித்தது போல இந்த குற்றப் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் ஜோதிடரின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த துண்டு பிரசுரத்தைக் கைப்பற்றிய போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொலையாளி நீதிமன்றத்தில் சரணடைய போவதாகக் கூறி சென்றதால் அங்குள்ள நீதிமன்றங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பட்டப்பகலில் ஒருவரை வெட்டிச்சென்ற சம்பவம் திருப்பூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.