ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரொருவர் மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று (சனிக்கிழமை) மாலை  இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினர், கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் பன்குடாவெளி வட்டார உறுப்பினரான சின்னத்துரை சர்வானந்தன் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சின்னத்துரை சர்வானந்தன் கூறுகையில், இலுப்படிச்சேனையிலுள்ள தனது வீட்டிலிருந்து பன்குடாவெளி நோக்கிச் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்துக்கு முன்னால் வழிமறித்து தாக்குதல் நடத்தினார். இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடொன்றையும் தெரிவித்துள்ளேன்.

மேலும் தாக்கியவரை எனக்கு நன்கு தெரியும். கடந்த தேர்தல் காலத்தில் ஏற்பட்ட எதிரணி நிலைப்பாட்டுக்காக பழி தீர்க்கும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்” எனவும்  அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.‪

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Batticola #police

No comments

Powered by Blogger.