அமைச்சர் சஜித் கிளிநொச்சிக்கு விஜயம்

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பாக ஆராய, அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவொன்று அங்கு சென்றுள்ளது.


அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை கையளிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சர் சஜித் அங்கு சென்றார்.அந்தவகையில், ஒருதொகுதி நிவாரணப் பொருட்களை கிளிநொச்சி மாவட்ட செயலாளரிடம் கையளித்தார்.

இதேவேளை, அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோரும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளனர்.

தற்போது, இரு தரப்பினரும் இணைந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனும் கலந்துகொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சஜித் தலைமையிலான குழுவினர் பண்ணங்கண்டி பிரதேசத்திற்குச் சென்று மக்களிடம் நேரடியாக நிவாரணப் பொருட்களை கையளிக்கவுள்ளனர். அதன் பின்னர் முல்லைத்தீவிற்குச் செல்லவுள்ளார்.

அத்தோடு, அமைச்சர் திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் ஆகியோர் மலையாளபுரம் பகுதிக்குச் சென்று நிவாரணப் பொருட்களை கையளிக்கவுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த 21ஆம் திகதி பெய்த மழையில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் மாத்திரம் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.