அன்புமணி - தினகரன், சபரிமலையில் கூட்டணி

”சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு திரும்பிவிட்டார் பாமகவின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். சபரிமலைக்கு அன்புமணி போன சமயத்தில் அங்கே தினகரனின் உறவினர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். மலை ஏறிய சமயத்தில் இருவரும் கிட்டதட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியபடியே நடந்திருக்கிறார்கள்.


அப்போது தினகரனின் உறவினர், ‘யாரோடும் கூட்டணி இல்லை . தனித்துப் போட்டி என்பதில் நீங்க உறுதியாக இருக்கீங்க. அது எந்த மாற்றத்தையும் உருவாக்கிடாது. ஒரு கட்சின்னா ஒரு எம்.எல்.ஏ.வாவது சட்டமன்றத்தில் இருக்கணும். இப்போ உங்களுக்கு யாரு இருக்கா சொல்லுங்க. அதனால நீங்க வீண் பிடிவாதத்தை விட்டுட்டு, கூட்டணி பற்றி யோசிக்கணும். அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைக்க உங்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். ஏன்னா அவங்க இரண்டு பேரையும் நீங்க அதிகமாகவே விமர்சனம் செஞ்சுட்டீங்க.

அதனால நீங்க தினகரனோடு சேருங்க. உங்களோட எண்ணங்களுக்கும் தினகரனின் எண்ணங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. இரண்டு பேருமே மாற்றம் கொண்டு வரணும் என்ற நோக்கத்துடன் இருக்கீங்க. அதிமுகவின் பெரும்பான்மையான தொண்டர்கள் தினகரனோடுதான் இருக்காங்க. அதனால இடைத்தேர்தல் தனியாக வந்தாலும் சரி, இல்லை, நாடாளுமன்றத்துடன் சேர்த்து வந்தாலும் சரி... நீங்க தினகரனோடு சேர்ந்து களமிறங்கினால் அது மிகப் பெரிய வெற்றியை தேடித்தரும்.’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அன்புமணியோ, ‘திராவிட கட்சிகளே வேண்டாம்னுதான் ஒதுங்கி இருக்கேன். மறுபடியும் எதுக்குங்க அவரோட... இப்போ இல்லைன்னாலும் இன்னும் பத்து வருஷத்துல நிச்சயமாக நாங்களும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவோம்’ என்று சொன்னாராம்.

தினகரன் உறவினர் விடவில்லை. ‘அந்த பத்து வருஷம் நீங்க இருக்கணும்னா கூட்டணி தேவை. எம்.எல்.ஏ.க்கள் தேவை . எதுவுமே இல்லாமல் 10 வருஷம் எப்படி தாக்குப் பிடிக்க முடியும். உங்க தொண்டர்கள் எத்தனை நாள் எதுவுமே இல்லாமல் பார்த்துட்டு இருப்பாங்க. எங்கே பவர் இருக்கோ அங்கேதான் போவாங்க. நீங்க சொல்ற மாதிரி அ.ம.மு.க.வின் கட்சி பேரிலேயே திராவிடம் இல்லை. அதனால் நீங்க நம்பி இங்கே வரலாம். உங்களுக்கான மரியாதை நிச்சயமாக கொடுக்க நான் உறுதி கொடுக்கிறேன். தரிசனம் எல்லாம் முடிச்சிட்டு வாங்க. ஒருநாள் தினகரனை சந்திச்சுப் பேச ஏற்பாடு செய்யுறேன். உங்களுக்கு அது பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்...’ என்று சொன்னாராம்.அன்புமணியோ, ‘இது நான் மட்டும் எடுக்கும் முடிவு இல்லை. அப்பாகிட்ட பேசணும். நான் ஊருக்குப் போனதும் அவரைப் பார்த்துப் பேசுறேன். அதுக்குப் பிறகு நல்ல தகவலா சொல்றேன்..’ என்றாராம்.

‘நீங்க தாராளமாக ஐயாகிட்ட பேசுங்க. தேவை என்றால் சொல்லுங்க... நாங்களே வந்து ஐயாவை பார்க்கிறோம். ஆயிரம் இருந்தாலும் அவரு வயசுல மூத்தவரு. அவரை நாங்க வந்து பார்க்கிறதுதான் மரியாதையாக இருக்கும். நீங்க பேசிட்டுச் சொல்லுங்க. நல்ல முடிவாக சொல்லுங்க... வடமாவட்டங்களில் உங்களுக்கு செல்வாக்கு இருக்கு. தென் மாவட்டங்களில் எங்களுக்கு இருக்கு. நாம கைகோர்த்தால், நிச்சயம் நினைத்து கூட பார்க்க முடியாத மாற்றங்களை தரலாம்...’என்று தினகரன் உறவினர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

சபரிமலை தரிசனம் எல்லாம் முடித்துவிட்டு, சென்னைக்கும் திரும்பிவிட்டார் அன்புமணி. ஆனால், இன்னும் ராமதாஸை சந்திக்க செல்லவில்லை. இன்னும் ஒரிரு நாட்களில் தைலாபுரத்துக்கு சென்று ராமதாஸை சந்திக்கப் போகிறாராம் அன்புமணி. அதன் பிறகு, அடுத்த கட்ட மூவ் இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தினகரனோடு கைகோர்க்கும் மூடுக்கு அன்புமணி வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

No comments

Powered by Blogger.