ரஜினியின் வில்லன் ‘ஜித்து

பேட்ட படத்தின் பாடல் நேற்று வெளியாகிப் பேசப்பட்டுவரும்
நிலையில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினி காந்த் நடிக்கும் படங்களுக்கு இயல்பாகவே உருவாகும் எதிர்பார்ப்பைக் கடந்து பேட்ட படத்திற்கு கூடுதல் சிறப்பு கவனம் உருவாகியிருப்பதற்கு முக்கிய காரணம் கார்த்திக் சுப்புராஜ் அமைத்த மெகா கூட்டணி தான். விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் என பலர் இணைந்து நடித்துள்ளனர். ரஜினியின் கெட் அப்புகளை விலக்கும் விதமாக அடுத்தடுத்து போஸ்டர்கள் வெளியானாலும் மற்ற நடிகர்களின் தோற்றம் கதாபாத்திரம் தொடர்பாக தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டுவருகிறது.
ரஜினியைத் தவிர மற்ற நடிகர் ஒருவரின் கெட் அப் இந்தப் படத்தில் முதன்முறையாக வெளிவந்தது பாபி சிம்ஹாவுக்கு தான். அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் தெரிவிக்கப்படாவிட்டாலும் நேற்று வெளியான ஓப்பனிங் பாடலில் அனிருத் குரல் கொடுத்துள்ள வரிகளுக்கு பாபி சிம்ஹா வாயசைக்க உள்ளது தெரியவந்தது. தற்போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழு கேரக்டர் போஸ்டர் வெளியிட உள்ளது. அதன் முதல்கட்டமாக விஜய் சேதுபதியின் தோற்றம் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில் முகத்தில் ரத்தக் காயத்துடன் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் ‘சப்மிஷின் கன்’னுடன் விஜய் சேதுபதி தோன்றியுள்ளார்.
அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஜித்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேட்ட படத்தின் ரிலீஸுக்கு 40 நாள்களே உள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்த கதாபாத்திரங்களின் போஸ்டர்கள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாக உள்ளன.

No comments

Powered by Blogger.