இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: சிறிசேனா

இலங்கை அரசியல் குழப்பத்தை இன்னும் ஒரு வாரத்தில் தீர்த்து வைப்பேன் என்றும், 225 எம்.பி.க்களை
வைத்திருந்தாலும் ரனிலை பிரதமர் ஆக்கமாட்டேன் என்றும் இலங்கை அதிபர் சிறிசேனா ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி இலங்கையில் அரசியல் குழப்பத்தைத் தொடங்கி வைத்த அதிபர் சிறிசேனா, நவம்பர் 9 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தையும் கலைத்தார்.
கடந்த இரு தினங்களாக அவர் ஐக்கிய தேசியக் கட்சியினரோடு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ரனிலை தவிர யாரை வேண்டுமானாலும் பிரதமர் ஆக்கத் தயார் என்று சிறிசேனா சொல்ல, ரனிலை தவிர யாரையும் பிரதமர் ஆக்கமாட்டோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறிவிட்டது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்தப் பின்னணியில் இன்று (டிசம்பர் 4) கொழும்பு சுகததாசா உள் அரங்கத்தில் நடந்த இலங்கை சுதந்திரா கட்சியின் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார் சிறிசேனா. அப்போது அவர்,
“சிலர் இந்நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது என்கிறார்கள். சிலர் நீதித்துறை பாரபட்சம் காட்டுகிறது என்கிறார்கள். நான் நீதித்துறையை மதிக்கிறேன். இப்போது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஓர் உறுதியைத் தருகிறேன்.
நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தை இன்னும் ஒரு வாரத்தில் நான் தீர்த்து வைக்கிறேன்” என்று உத்திரவாதம் கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய சிறிசேனா, “நான் வெளிநாட்டுத் தூதரகங்களை வழிபடுபவன் அல்ல. நான் மக்களை மட்டுமே வணங்குகிறேன். ஆனால் ரனில் விக்ரமசிங்கே அப்படி அல்ல. அவரது அரசியல் இலங்கைக்குப் பொருந்தாது. எனக்கும் ரனிலுக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவுமில்லை. ஆனால், அவர் நம் கலாச்சாரத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறார். இலங்கையின் சிந்தனை அவரிடம் இல்லை. ரனில் ஐக்கிய தேசியக் கட்சியை சிதைக்கிறார். நல்ல ஆட்சியைச் சிதைக்கிறார். அவருக்கு நாடாளுமன்றத்தின் 225 எம்.பி.க்களும் ஆதரவளித்தால் கூட நான் பிரதமராக ஏற்க மாட்டேன்” என்று குறிப்பிட்டார் சிறிசேனா.
உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை இன்னும் சில நாட்களில் முடிந்து தீர்ப்பு வந்துவிடும் என்பதால் இன்னும் ஒரு வாரத்துக்குள் தீர்வு வருமென்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார் சிறிசேனா.

No comments

Powered by Blogger.