மெரினாவில் குப்பை: நீதிபதிகள் வேதனை!

கடந்த ஆண்டு மே மாதம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட அந்த கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 5) விசாரணைக்கு வந்தது.


அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி இருந்தனர். மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,

விபத்தில் பலியான 4 பேருக்கு தலா 1 லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்த 6 பேருக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்த 2 பேருக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கான மொத்தத் தொகையான 9 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். கட்டட உரிமையாளருக்கு எதிரான குற்ற வழக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் நிலுவையில் இருப்பதாகக் கூறினார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதல்ல என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு வழங்குவது பற்றி பதில் அளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 வார காலத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். கட்டட உரிமையாளர் விஜயகுமார் மீதான குற்ற வழக்கில் குற்றப்பத்திரிக்கையை 1 வார காலத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையின்போது, மெரினா கடற்கரை குப்பையாகக் காட்சி அளிப்பதாக வேதனை தெரிவித்தனர் நீதிபதிகள். புத்தாண்டுக்கு முன்னதாக மெரினா கடற்கரையை முழுமையாகச் சுத்தப்படுத்திட திட்டம் வகுத்துச் செயல்படுத்தவும், புத்தாண்டின்போது தூய்மையான மெரினாவாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.