ஜெ. சமாதியில் தினகரன்

அதிமுகவை மீட்போம் என்று ஜெயலலிதா சமாதி முன்னிலையில் அமமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் அன்பழகன், பழனியப்பன், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தமிழன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைதி பேரணி மெரினாவில் நிறைவடைந்ததும், தொண்டர்களுடன் தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அமமுகவினர் உறுதிமொழிகளை ஏற்றனர்.
”தமிழகத்தை காத்திடும் வகையில், அதிமுக கட்சியைச் சுயநலம் கொண்ட துரோகிகள் கையில் இருந்து, அமமுக மீட்டெடுக்கும் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். மிக விரைவில் நீதியின் தீர்ப்பை பெற்று இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்டு, ‘எத்தனை ஆண்டுக்காலம் ஆனாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகளை நிறைவேற்றுவோம் திராவிட இயக்கத்தின் கொள்கையான சமூக நீதியை நிலைநாட்டி 69சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்று தந்து, மாநில உரிமைகளைக் காத்தவர் ஜெயலலிதா. அதுபோன்று, இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ குரல் எழுப்பியவர். அவர் வழியைப் பின்பற்றுவோம். ஆர்.கே நகரில் வெற்றி பெற்றது போன்று 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், வெற்றியை பெற்றுகாட்டுவோம்” என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழகம் இப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது. அதாவது, தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்திருக்க மாட்டார்கள். இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க விடாமல் செய்திருப்பார். 8 வழிச்சாலை உட்பட மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் கொண்டு வந்திருக்க முடியாது என்றார். சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அமமுக சார்பிலும் கலந்து கொண்டு, மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். மத்திய அரசின் கீழ் கைக்கட்டி இருக்கும் இந்த ஆட்சியில் தமிழகத்துக்கு எந்தப் பலனும் கிடைக்காது. விரைவில் ஆட்சி மாற்றம் தேவை என்று மக்கள் விரும்புகிறார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்

No comments

Powered by Blogger.