மேகதாட்டு: தமிழகத்துக்கு உதவும் திட்டம்தான்

மேகதாட்டு அணை தமிழகத்துக்கு உதவக்கூடிய திட்டம்தான்” என்று குறிப்பிட்டுள்ள கர்நாடக அமைச்சர்
டி.கே.சிவக்குமார், இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணைய அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அனுமதியை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக அரசு மற்றும் நீர்வள ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்று (டிசம்பர் 6) பெங்களூருவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, டி.கே.சிவக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், “காவிரி ஆறு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக விளங்குகிறது. காவிரி பிரச்சினைகள் தொடர்பாக நிரந்தர தீர்வையே இரு மாநிலங்களும் எதிர்பார்க்கின்றன. மேகதாட்டு பிரச்சினை தொடர்பாக நட்பு ரீதியில் பேசி சுமூகமானத் தீர்வை கொண்டுவர கர்நாடக அரசு என்பதை உங்களின் கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன். இது குடிநீர் தேவைக்கான அணை” என்று குறிப்பிட்டுள்ளார்.
“பருவ காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்துவருகிறது, இந்த வருடம்கூட அப்படித்தான் நடந்தது. மேகதாட்டு திட்டத்தின் மூலம் அது தவிர்க்கப்பட்டு, நீரை வெளியிடும் செயல்பாடு ஒழுங்குபடுத்தப்படும். இது தமிழகத்துக்கு உதவக்கூடிய திட்டம்தான்” என்று தெரிவித்துள்ள சிவக்குமார், இத்திட்டம் குறித்து தமிழக அரசும், மக்களும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
“இத்திட்டத்தின் உண்மை நிலை என்பது வேறு ஆகும். எனவே, மேகதாட்டு விவகாரம் குறித்து பேச உங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும்” என்றும் தனது கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.