பாபர் மசூதி இடிப்பு: என்ன நடந்தது அன்று

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகக் கூறி கரசேவகர்கள் ஒருங்கிணைந்து மசூதியை இடித்த நாள் இந்த டிசம்பர் 6.
மசூதி இடிப்பின்போதும், இடிப்புக்குப் பின்னரும் வெடித்த மதக் கலவரத்தில் கிட்டத்தட்ட 2,000 பேர் கொல்லப்பட்டனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 26 ஆண்டுகளை எட்டிவிட்டது. ஆனாலும் இந்தப் பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டவே இல்லை. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ராமர் கோயில் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. இப்போதும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில் இந்த ஆண்டும் இந்தப் பிரச்சினை சற்றே வலுவாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒருபக்கம் உள்நாட்டில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று முழங்கும் பாஜக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த விவகாரத்தால் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சினால், இல்லை இல்லை நாங்கள் ராமர் கோயில் கட்ட மாட்டோம்; அது அரசியலுக்காக என்றும் கூறுகிறது. 26 ஆண்டுகள் கழித்தும் ராமர் கோயில் விவகாரம் அணையாத நெருப்பாய் இருக்குமளவுக்கு அப்படி என்னதான் நடந்தது 1992, டிசம்பர் 6 அன்று? வாருங்கள் பார்க்கலாம்.
டிசம்பர் 6ஆம் தேதிக்கு முந்தைய ஒரு வாரமாகவே இந்தப் பகுதியில் கர சேவகர்கள் வரத் தொடங்கிவிட்டனர். ராமர் பிறந்த பூமியை மீட்போம் என்று முழங்கத் தொடங்கிவிட்டனர். டிசம்பர் 5ஆம் தேதி மாலையே அந்தப் பகுதியில் சூழ்நிலை மெல்ல மெல்லக் கட்டுப்பாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கிவிட்டது. மறுநாளோ நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது.
டிசம்பர் 6, காலை 6.00 மணி
பாபர் மசூதி பகுதிக்குள் கரசேவகர்கள் மடை திறந்த வெள்ளம்போல வந்து குவிந்துகொண்டிருந்தனர்.
பத்திரிகையாளர்களும் சம்பவ இடத்திற்கு அதிகளவில் வந்து கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு சுவரையொட்டி உத்தரப்பிரதேச ஆயுதக் கட்டுப்பாட்டு காவலர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர்.
அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் அப்பகுதியில் பெருமளவில் குவிந்திருந்தனர்.
பாபர் மசூதிக்கு உட்பட்ட 2.77 ஏக்கரில் பாதுகாப்புக்காக முதல் நாள் இரவே கூடுதலான தடுப்புகளைக் காவல் துறையினர் வைத்திருந்தனர்.
காலை 10 மணி
சாதுக்களும், மகந்துகளும், பல்வேறு தலைவர்களும் அப்பகுதிக்கு வந்தனர். குறிப்பாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அங்கு வந்தனர்.
காலை 10.30
விஷுவ ஹிந்து பரிஷத் மற்றும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அங்கிருந்த மேடைக்குச் சென்றனர். அந்த மேடையானது கர சேவா பகுதியிலிருந்து 600 அடி தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் ஒரு பொதுக் கூட்டத்தை அங்கு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.
அப்போதே கூட்டத்தில் இருந்த சில கர சேவகர்கள், சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியின் முக்கிய நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தள்ளத் தொடங்கினர்.
உள்ளே நுழைய முயலும் கூட்டத்தை வெளியே தள்ள ஆயுதப் படைக் காவலர்கள் தடுமாறத் தொடங்கினர்.
காலை 11.00 மணி
முக்கிய நுழைவாயில் வழியாக கரசேவகர்கள் வெற்றிகரமாக உள்ளே நுழைந்தார்கள்.
மேலும் சிலர் தடுப்புகளைத் தள்ளிவிட்டு மசூதிக்குள் நுழைய முயன்றனர்.
”நாங்கள் இந்த இடத்தில் கோயில் கட்டுவோம்” என்ற சத்தமாக கத்தினர்.
காவல் துறை ஒன்றும் செய்ய இயலாமல் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
ஊடகவியலாளர்கள் அப்போது அங்கு இருந்தனர்.
காலை 11.15 மணி
”எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். போய் ஓய்வெடுங்கள்” என்று ஊடகவியலாளர்களிடம் ஃபாசியாபாத் காவல் கண்காணிப்பாளர் டி.பி.ராய் கூறினார்.
காலை 11.35 மணி
மஹந்த் பரமஹம்சர் தலைமையில் சாதுக்கள் மசூதிக்குள் கட்டவிருக்கிற புதிய கட்டடத்துக்கான பூஜையை மேற்கொள்ளத் தொடங்கினர்.
50க்கும் மேற்பட்ட கர சேவகர்கள் மதில்கள் மேல் ஏறிக் குதித்தனர்.
ஆயுதப்படைக் காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர். இதையடுத்து காவலர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
காலை 11.40 மணி
கர சேவகர்கள் மசூதியின் முக்கியப் பகுதியை நெருங்கிவிட்டனர்.
அப்பகுதியைச் சுற்றியிருந்த காவல்துறை அங்கிருந்து தனது பாதுகாப்பை விலக்கிக் கொண்டு வெளியேறியது. நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்களின் கைகளில் சுத்தி, கடப்பாரை மற்றும் இரும்பு ராடுகள் போன்ற ஆயுதங்கள் இருந்தன.
காலை 11.43 மணி
3 கர சேவகர்கள் மசூதியின் நடு குவிமாடத்தின் மீது ஏறிவிட்டார்கள்.
இரும்புக் கம்பியைப் பிடித்து மேலும் இருமுறை ஏற முயற்சித்துத் தோல்வியடைந்த பிறகு, அவர்கள் மேலே ஏறிவிட்டார்கள். இவர்கள் மலையேற நன்கு பயிற்சி பெற்றவர்களைப் போல இருந்தார்கள். மிகவும் வெறிகொண்டவர்களாய் செயல்பட்டு மேற்கூரையை உடைக்கத் தொடங்கினார்கள்.
காலை 11.55 மணி
உடைப்பதை நிறுத்துமாறு ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஹெச்.வி.சேஷாத்ரி 4,5 மொழிகளில் கர சேவகர்களிடம் வலியுறுத்தினார். ஆனால் அவரது குரலை யாரும் கேட்கவில்லை.
நண்பகல் 12.05 மணி
மசூதியைத் தகர்க்கும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஆக்ரோஷத்துடன் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் கைகளில் காவிக் கொடிகளையும் தாங்கியிருந்தனர். இடிக்கப்படும் மசூதியிலிருந்து புழுதி பறக்க ஆரம்பித்தது. உத்தரப் பிரதேச மாநில மூத்த அதிகாரிகள், மாஜிஸ்திரேட்டுகள், காவல் துறை அதிகாரிகள் செய்வதறியாமல் நின்றிருந்தனர். மசூதி இடிபடும் மகிழ்ச்சியில் பெண் கர சேவகர்களும் காவிக் கொடியை நட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நண்பகல் 12.15 மணி
மசூதியின் 3 குவிமாடங்களையும் தகர்க்க மிகப்பெரிய சுத்தியல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் கர சேவகர்களால் தாக்கப்பட்டனர்.
கேமராக்கள் உடைக்கப்பட்டன.
கரசேவகர்களின் வெறிகொண்ட இந்தத் தாக்குதலை எதிர்நோக்காத பத்திரிகையாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் இரத்தம் வழிய ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.
பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தது. பணப்பைகள் திருட்டு போயிருந்தன.
நண்பகல் 12.25 மணி
கரசேவகர்கள் இடிப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டு உடனடியாக கீழே வர வேண்டுமென அவர்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் ஒலிபெருக்கியில் உத்தரவிட்டனர். ஆனால் எந்தப் பயனும் இல்லை.
பிற்பகல் 1.55 மணி
முதல் குவிமாடம் கீழே சாய்க்கப்பட்டது. அதன் இடிபாடுகளுக்குள் 25 கர சேவகர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள்.
மாலை 3.00 மணி
பெண் கரசேவகர் சாத்வி ரிதம்பரா மகிழ்ச்சியில் பாட்டுப் பாடி நடனம் ஆடத் தொடங்கினார்.
மாலை 3.30 மணி
2ஆவது குவிமாடமும் கீழே சாய்க்கப்பட்டது.
மாலை 4.00 மணி
பாபர் மசூதியோடு நில்லாமல், அயோத்தியாவில் இருந்த மற்ற 2 மசூதிகளுக்கும், 6 இசுலாமியர்கள் வீடுகளுக்கும் கர சேவகர்கள் தீ வைத்தனர்.
மாலை 4.15 மணி
எஞ்சியிருந்த ஒரு குவிமாடத்தின் இரு துருவங்கள் மட்டுமே ஒட்டியிருந்தது.
மாலை 4.49 மணி
கர சேவகர்கள் கடைசி குவிமாடத்தையும் தகர்க்க மிகத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டனர். மிக நீண்ட மரத் துண்டுகளை எடுத்து வந்து மனிதச் சங்கிலி கோர்த்து குவிமாடத்தின் துருவங்களில் வேகமாக இருபக்கமும் இடித்தனர். இறுதி குவிமாடமும் சாய்ந்தது. இதையடுத்து விஸ்வ ஹிந்து பரிஷத் செயற்பாட்டாளர்கள் ஊர்வலமாய் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியே செம்புழுதி சூழ்ந்த நிலையில் காட்சியளித்தது.
-பிரகாஷ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.