மாரி 2: அராத்து ஆனந்தியும், ரவுடி பேபியும்!

தனுஷ் நடித்த மாரி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பாலாஜி மோகன் இதன் அடுத்த பாகத்தின் பணிகளைத் தொடங்கியதிலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. கதாநாயகியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமியும் படத்தில் இணைந்தது அந்த எதிர்பார்ப்பை எகிறவைத்தது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் அதற்கு நியாயம் செய்துள்ளது.


ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என கமர்ஷியல் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்டு படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது. மாஸ் உருவாக்கும் காட்சிகள், ரோபோ ஷங்கர் வரும் இடங்களில் உள்ள காமெடி ஆகியவை ரசிக்க வைக்கின்றன. அராத்து ஆனந்தியாக வலம் வரும் சாய் பல்லவி தனுஷை ரவுடி பேபி என கலாய்க்கும் போதும் ரொமான்ஸ் காட்சியிலும் தனித்துத் தெரிகிறார். மலர் டீச்சராய் வந்து மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்த அவருக்கு இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் பேசப்படும். முறுக்கிய மீசையும், நீண்ட கிருதாவும், கூலிங் கிளாஸுமாக தனுஷ் வரும் காட்சிகள் சிறப்பாக உருவாகியுள்ளன.

“சாவைப் பத்தி கவலைப்படாதவனை சாகடிக்கிறது ரொம்ப கஷ்டம்”, “நீ பேட்ன்னா (Bad) நான் உனக்கு டேட் (Dad)", என்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. “நான் கெட்டவனுக்கெல்லாம் கெட்டவன் டா” என்று தனுஷ் சொல்லும் போது அவரது உடல்மொழி ரசிக்க வைக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பின்னணியில் ஒலிக்க டான் கதாபாத்திரமாக ‘கெத்’தாக வலம் வந்தாலும் காமெடி காட்சியிலும் தனுஷ் கவர்கிறார்.

காட்சியமைப்பு, வசனங்கள், நடிகர், நடிகைகளின் பங்களிப்பு என ட்ரெய்லரைப் பார்க்கும் போது படம் ஏற்படுத்தவுள்ள உணர்வுகளைக் கணிக்க முடிகிறது.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பாடல்களை தனுஷும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து எழுதியுள்ளனர். வுண்டர் பார் ஸ்டூடியோஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.