வருமானத்தில் தீபிகா நிகழ்த்திய சாதனை!

2018ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்கார பிரபலங்களின் 
டாப் 100 பட்டியலில் தீபிகா படுகோன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தீபிகா நடிப்பில் இந்த ஆண்டு பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான பத்மாவத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வசூலிலும் சாதனைகளை நிகழ்த்தியது. அந்தப் படம் உட்பட அவர் சென்ற ஆண்டு ஈட்டிய வருமானம் ரூ.112.8 கோடி ஆகும். பெண் பிரபலம் ஒருவர் முதல் ஐந்து இடங்களுக்குள் வருவது இதுவே முதன்முறை ஆகும். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டிசம்பர் மாத இதழின் அட்டைப் படத்திலும் தீபிகாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தீபிகாவுக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ரன்வீர் இந்தப் பட்டியலில் ரூ.84.17 கோடி வருமானத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். அவரது வருமானம் ரூ.253.25 கோடி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரூ.228.09 கோடி வருமானத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். விளையாட்டு வீரர் இரண்டாவது இடம் பெறுவதும் இதுவே முதன்முறையாகும். முன்னாள் கேப்டன் தோனிக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது
அமீர் கான் பட்டியலில் ஆறாவது இடத்திலும் அமிதாப் பச்சன் படத்தில் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.66.75 கோடியுடன் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ரஜினிகாந்த் ரூ.50 கோடி வருமானம் ஈட்டி 14ஆவது இடத்தையும், விஜய் ரூ.30.33 கோடியுடன் 26ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். விக்ரம் ரூ.26 கோடி பெற்று 29ஆவது இடத்தில் உள்ளார். சூர்யா, விஜய் சேதுபதி இருவரும் ரூ.23.67 கோடி வருமானம் ஈட்டி 34ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
2018ஆம் ஆண்டு பிரபலங்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.3,140.25 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 17% அதிகமாகும். சென்ற ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.2,683 கோடி என்ற அளவில் இருந்தது.

No comments

Powered by Blogger.