துணைவேந்தர் போட்டியில் தமிழிசையின் கணவர்

எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர்
சவுந்தர ராஜன் உள்ளிட்டு 41 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழக மருத்துவத் துறை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்திற்கான துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசிதழில் (அக்டேபர் 23 ஆம் தேதியிட்டது) அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பாணையில், . பதவிக்கான மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி்த் தேதியாக கடந்த 30 ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான தகுதிகளாக மருத்துவ பணியில் 20 ஆண்டுகள் அனுபவமும், 10 வருடம் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அறிவிப்பாணையைத் தொடர்ந்து இதுவரை 41 மருத்துவர்கள் மனு செய்துள்ளனர். மனு செய்தவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன், முன்னாள் பதிவாளர் டாக்டர் சுதா சே‌ஷய்யன், டாக்டர் பால சுப்பிரமணியன், டாக்டர் விமலா, பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம் ஆகியோர் உள்ளனர்.
வெளி மாநிலங்களை சேர்ந்த 3 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு, டாக்டர் பாரத்மன்சுக்லால் மோடி (குஜராத்), டாக்டர் காமேஷ்வரன் (ஆந்திரா), டாக்டர் வெங்கடகிருஷ்ண முரளி (கர்நாடகா). இந்த பட்டியலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனும் உள்ளார்.
டாக்டர் சவுந்தரராஜன் புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவ துறை நிபுணர் ஆவார். அரசு மற்றும் தனியார் துறையில் மருத்துவர் மற்றும் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி அனுபவம் பெற்றவர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தவர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு இலவச மருந்துகள் வழங்கும் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்தார். ஏராளமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தவர். நடிகர் ரஜினி, மறைந்த தலைவர்கள் ஜானகி ராமச்சந்திரன், மூப்பனார் ஆகியோருக்கு சிகிச்சை அளித்தவர்.
விண்ணப்பித்துள்ளவர்களின் தகுதி, அனுபவம், நிர்வாக திறமை ஆகியவற்றின் அடிப்படையில் துணை வேந்தரை தேர்வுக்குழு தேர்வு செய்யும். என அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.