மீனவர்களுக்கான கருவிகள்: தமிழக அரசு ஆணை!

மீனவர்களுக்கான சாட்டிலைட்
போன்கள், ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதற்காக 3 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காகச் செல்லும் மீனவர்களை, புயல் மழைக் காலங்களில் தொடர்புகொள்வது சிரமமாக உள்ளது. ஆழ்கடலில் ஒரு வார காலத்துக்கும் மேலாகத் தங்குவதால், பருவமழைக் காலங்களில் ஏற்படும் புயல் சின்னம் குறித்த எச்சரிக்கையை அவர்களுக்குச் சொல்ல முடிவதில்லை. இதனால் பொருட்சேதமும் உயிர்சேதமும் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வு காணும் வகையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைத் தொடர்பு கொள்ள சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் கருவிகள் வழங்க முடிவு செய்தது தமிழக அரசு. இதனைச் செயல்படுத்தும் வகையில், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 3 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் 181 சேட்டிலைட் போன்கள், 240 நேவிக் கருவிகள், 160 நேவ்டெக்ஸ் கருவிகள் வாங்குவதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 21 சாட்டிலைட் போன்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 20லட்சம் ரூபாய் ஆகும். 240 நேவிக் கருவிகளை இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும், 160 நேவ்டெக்ஸ் கருவிகளை வெளிநாட்டில் இருந்தும் வாங்குவதற்குத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
15 முதல் 20 படகுகள் கொண்ட ஒரு குழுவுக்கு 2 சாட்டிலைட் போன்கள், 3 நேவிக் கருவிகள், 2 நேவ்டெக்ஸ் கருவிகள் என்கிற கணக்கில் மீனவர்களுக்கு இந்த நவீன கருவிகள் வழங்கப்பட உள்ளன. 

No comments

Powered by Blogger.