திராவிட் பாதையில் புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டு 123
ரன்கள் அடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்ததன் மூலம் அடுத்த ராகுல் திராவிட் என்று அழைக்கப்படுவதற்கான காரணங்களை அதிகமாக்கியிருக்கிறார்.

கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது உடனடியாக முன்னாள் நட்சத்திர வீரர்களுடன் ஒப்பிட்டுப் பேசப்படுவது வழக்கம். இது வீரர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமையும் என்று கூறப்பட்டாலும் பல ஆண்டு காலம் அனுபவமுள்ள பல போட்டிகளைக் கண்ட நட்சத்திர வீரர்களுடன் ஒப்பிடுவது ஏற்புடையது ஆகாது என்றும், இளம் வீரர்கள் மேல் இது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் அவரை சச்சின் டெண்டுல்கரோடு ஒப்பிட்டுப் பேசவைத்தது. அது தொடர்பான விமர்சனங்கள் அவர் ஒவ்வொரு முறையும் முந்தைய சாதனைகளை தகர்க்கும்போது எழும்புகின்றன. இந்திய அணியில் புஜாராவின் ஆட்டம் ராகுல் திராவிட்டை நினைவுபடுத்துவதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சவாலான நேரங்களில் எதிர் முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் பொறுமையாக, ஷாட்களைக் கவனத்துடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவது ராகுல் திராவிட்டின் சிறப்பம்சம். புஜாராவும் பல போட்டிகளில் இத்தகைய முறையைக் கையாள்வதால் திராவிட்டோடு அவரது ஆட்டம் ஒப்பிட்டுப் பேசப்படுகிறது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 3000, 4000, 5000 ரன்களை இரு வீரர்களும் தங்களது முறையே 67, 84, 108 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளனர். ராகுல் திராவிட்டின் நிதானத்தை ஷாட்களை எதிர்கொள்வதில் மட்டுமல்லாமல் சொல்லி வைத்தாற்போல் இத்தனை இன்னிங்ஸ்களில் இத்தனை ரன்களை அவரைப் போலவே அடித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசப்பட்டுவருகிறது.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.