ஹெல்மெட் விவகாரம்: விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர்
விஜயபாஸ்கருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2017ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 3,507 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்தது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருக்கும் நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பையே அமைச்சர் விஜயபாஸ்கர் மதிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிராஃபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதியன்று நடந்த மருத்துவ முகாமை ஒட்டி நூறு பேருடன் இரு சக்கர வாகனப் பேரணியில் கலந்துகொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். அந்த வாகனப் பேரணியில் அவர், ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று (டிசம்பர் 6) விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரம் தொடர்பாக விஜயபாஸ்கர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும் மதுரையில் சர்கார் படத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மீது நடவடிக்கை கோரிய வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.