நாட்டின் தலைவிதியை மாற்றலாமா??

புதிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு ஜனாதிபதி அனுமதிக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவராவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணலாம். நாடு முன்னோக்கி நகரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பாரிய இழப்பினை மக்களே செலுத்தவேண்டியிருக்கும்.

இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு ஜனாதிபதி அனுமதிக்கவேண்டும். இலங்கையின் அரசமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி தொடரும்.

இலங்கையின் சுயாதீன நீதித்துறை, நீதியான தீர்ப்பை வழங்கும். 2015இல் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டவுடன் நீதித்துறையின் சுதந்திரம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. கடந்த மூன்று வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது அதன் தலைவரோ நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடவில்லை“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.