கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி சாலைமறியல்

கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மதுரை மாவட்ட விவாசயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை நதியின் கிளை நதியான கிருதுமால் நதி முள்ளிப்பள்ளம் பகுதியிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் வரை அமைந்துள்ளது. இந்த நதியின் மூலம் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் பயன் பெற்றுவந்தனர். இந்த நிலையில், கடந்த 60 ஆண்டுகளாக மதுரை மண்டல பொதுப்பணித்துறை கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இது குறித்து நான்கு  மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக கிருதுமால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில்  நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பொதுப்பணித்துறையை கண்டித்து இன்று  மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாததால் அங்கு 500க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.